மாமல்லபுரத்தில் எம்.பி.க்கள் குழுவினர் ஆய்வு


மாமல்லபுரத்தில் எம்.பி.க்கள் குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 1 March 2021 7:07 PM IST (Updated: 1 March 2021 7:07 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியம், பீகார், குஜராத், ஜார்கண்ட், அரியானா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பஞ்சாப், பீகார், உத்தரகாண்ட் மாநிலங்களை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவினர் 30 பேர் சுற்றுலா மேம்பாடு, அதன் திட்டப்பணிகள், விமான போக்குவரத்து வளர்ச்சி, தொலை தொடர்பு திட்டம் போன்ற துறைகளின் கலந்தாய்வு நிகழ்வுக்காக சென்னை வந்தனர்.

மாமல்லபுரம் வந்த அந்த குழுவினர் வெண்ணை உருண்டைக்கல் புராதன சின்னம் அருகில் தமிழக அரசு சார்பில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் வரவேற்றார். பின்னர் எம்.பி.க்கள் குழுவினர் அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட இடங்களில் நேரில் சென்று பார்வையிட்டு சுற்றுலா வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

இதில் மாமல்லபுரம் நகரின் வரலாற்று பெருமைகள், பல்லவர்களின் வரலாற்று பின்னணி, அவை உருவான சரித்திர பின்னணி, எந்தவித தொழில் நுட்ப வசதியும் இல்லாத 7-ம் நூற்றாண்டில் பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்களின் தொன்மை குறித்து மூத்த சுற்றுலா வழிகாட்டி எம்.கே.சீனிவாசன் எம்.பி.க்களுக்கு விளக்கி கூறினார். அதனை அவர்கள் ஆர்வமாக கேட்டு வியந்தனர். 

எம்.பி.க்கள் குழுவினருடன் மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் ராஜாராமன், மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் சரவணன், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.

Next Story