24 மணி நேரமும் இயங்கும் வாக்காளர் உதவி மையம்


24 மணி நேரமும் இயங்கும் வாக்காளர் உதவி மையம்
x
தினத்தந்தி 2 March 2021 1:05 AM IST (Updated: 2 March 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் தரைத்தளத்தில் தேர்தல் பிரிவு அலுவலகம் அருகில் மாவட்ட வாக்காளர் உதவி மையம் தேர்தல் ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.

திருச்சி
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டது. திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு விட்டனர். மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சிவராசு தலைமையில் தேர்தலுக்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இரண்டொரு நாளில் இந்த கட்டுப்பாட்டு அறை பயன்பாட்டிற்கு வந்து விடும். இந்நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் தரைத்தளத்தில் தேர்தல் பிரிவு அலுவலகம் அருகில் மாவட்ட வாக்காளர் உதவி மையம் தேர்தல் ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது. 24 மணி நேரமும் இயங்க கூடிய இந்த மையத்தை 1950 என்ற தொலைபேசி எண் மூலம் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
உரையாடலை தமிழில் தொடர 1 என்ற எண்ணையும், ஆங்கிலத்தில் பேச 2 என்ற எண்ணையும் அழுத்தினால் வாக்காளர் அட்டை பதிவு, வாக்காளர் அட்டைக்காக விண்ணப்பித்து இருந்தால் விண்ணப்பத்தின் தற்போதைய நிலை, வாக்காளர் அட்டை அச்சிடப்பட்டு விட்டதா? வாக்குச்சாவடி, சட்டமன்ற தொகுதி, சட்டமன்ற தொகுதியில் உள்ள தேர்தல் அதிகாரிகள் பற்றிய விவரங்கள், தேர்தல் தொடர்பான புகார்கள் இருந்தால் அதனை தெரிவிப்பதற்கான வழிமுறைகள் பற்றி அங்கு பணியில் உள்ள ஊழியர்கள் பதில் அளிக்கிறார்கள். ஒரே எண்ணில் பல விதமான தகவல்களை பதிலாக பெறுவது மட்டும் இன்றி வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை குறிப்பிட்டால் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்பதையும் எளிதாக தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த மையத்தில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 6 பணியாளர்கள், 2 மணி முதல் இரவு 10 மணி வரை 6 ஊழியர்கள், இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை 2 பணியாளர்கள் என மொத்தம் 12 பணியாளர்கள் சுழற்சி முறையில் தேர்தல் தொடர்பாக வாக்காளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்கள்.

Next Story