நெல்லையில் முதியோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
நெல்லை மாவட்டத்தில் முதியோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
நெல்லை, மார்ச்:
நெல்லை மாவட்டத்தில் முதியோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.
கொரோனா வைரஸ்
உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவியது. இதையொட்டி கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இருந்த போதிலும் ஏராமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர், பலர் உயிரிழந்தனர்.
இந்த கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில், தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு சமீபத்தில் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டது.
முதியவர்களுக்கு தடுப்பூசி
முதல் கட்டமாக டாக்டர், செவிலியர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அவர்களுக்கு 2-வது கட்ட தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டது. தமிழகத்தில் முதியோருக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.
மேலும் 45 வயதை கடந்த நீரிழிவு, ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள்
நெல்லை மாவட்டத்தில் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி, அம்பை, நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ரெட்டியார்பட்டி, முக்கூடல் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காலை 10 மணி முதல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதில் பலர் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘60 வயதை கடந்த விருப்பம் உள்ளவர்கள், தங்களது வயதை நிருபிக்கும் வகையில் ஆதார், ரேஷன் அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். மேலும் ஆரோக்கிய சேது, கோவிட் செயலிகள் மூலமாகவும் முன்பதிவு செய்து தடுப்பூசி போடலாம். அரசு ஆஸ்பத்திரிகளில் இந்த தடுப்பூசி முற்றிலும் இலவசமாக போடப்படுகிறது’’ என்றனர்.
இதுதவிர தனியார் ஆஸ்பத்திரிகளில் ரூ.250 கட்டணத்தில் முதியோர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
பணகுடி
பணகுடி அரசு ஆஸ்பத்திரியில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டோரில் இணை நோய் உள்ளவர்களுக்கும் நேற்றுமுதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அரசு மருத்துவர் தேவ் மகிபன் தலைமையில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கண்ட வயதினருக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று வள்ளியூர் வட்டார அரசு மருத்துவர் கோலப்பன் ெதரிவித்தார்.
Related Tags :
Next Story