கடலூர் அருகே பயங்கரம் தாய், மகள் வெட்டிக்கொலை


கடலூர் அருகே பயங்கரம் தாய், மகள் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 2 March 2021 2:02 AM IST (Updated: 2 March 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே தாய்-மகள் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.

நெல்லிக்குப்பம்,

புதுச்சேரி மாநிலம் நோனாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 48). இவர்களுடைய மகள் மாதங்கி என்கிற சந்தியா (24). மகன் சிவகுரு. 
சிதம்பரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். இதையடுத்து விஜயலட்சுமி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று காலை கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி அருகே உள்ள எடையார்பாளையம் தென்னந்தோப்பு பகுதியில் விஜயலட்சுமி, சந்தியா ஆகிய 2 பேரும் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

தாய்-மகள் படுகொலை

அதன்பேரில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் புதுச்சேரி தெற்கு போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

விஜயலட்சுமியும், சந்தியாவும் மர்மநபர்களால் கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் அவர்கள் எதற்காக கொலை செய்யப்பட்டார்கள் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. 

மதுபாட்டில்கள், பணம் பறிமுதல்

இதையடுத்து கடலூரில் இருந்து மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தை மோப்பம் பிடித்தபடி சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள புதுச்சேரி நோனாங்குப்பம் பகுதி வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. 

மேலும் அந்த இடத்தில் மதுபாட்டில்கள், கப்புகள், சிகரெட்டுகளும், பணமும் சிதறிக்கிடந்தன. அவற்றை ரெட்டிச்சாவடி போலீசார் கைப்பற்றினர். கொலை நடந்த இடத்தில் இருந்த தடயங்களையும் போலீசார் கைப்பற்றினர்.பின்னர் இறந்த விஜயலட்சுமி, சந்தியா ஆகியோரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

தனிப்படை அமைப்பு

மேலும் இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயலட்சுமி, சந்தியாவை வெட்டிக்கொலை செய்த மர்மநபர்கள் யார்?, சொத்து தகராறு காரணமாக அவர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்களா?, அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, இன்ஸ்பெக்டர் சரஸ்வதி ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அவர்களை கொலை செய்தவர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். 
தாய்-மகள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story