கடையநல்லூர் தாலுகா அலுவலகம் புதிய கட்டிடத்தில் இயங்கியது


கடையநல்லூர் தாலுகா அலுவலகம் புதிய கட்டிடத்தில் இயங்கியது
x
தினத்தந்தி 2 March 2021 2:20 AM IST (Updated: 2 March 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் தாலுகா அலுவலகம் புதிய கட்டிடத்தில் இயங்கியது.

அச்சன்புதூர், மார்ச்:
தென்காசி தாலுகாவில் இருந்து ஆய்க்குடி, கடையநல்லூர், சிவகிரி தாலுகாவில் இருந்து புளியங்குடி, ஆகிய 3 பிர்காக்களை தனியாக பிரித்து கடையநல்லூர் தாலுகா கடந்த 2015-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடையநல்லூர் தாலுகா அலுவலகம், மின்சார வாரியத்திற்கு எதிரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த நிலையில் யூனியன் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரூ.1 கோடியே 94 லட்சத்தில் நவீன வசதிகளுடன் புதிய அலுவலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. புதிய கட்டிடத்தின் தரை தளத்தில் தாசில்தார் அறை, சமூக பாதுகாப்பு திட்ட அலுவலக அறை, நில அளவை அறை, விசாரணை அறை, கணினி அறை, பொதுப்பிரிவு அலுவலகம், ஆண்கள், பெண்கள், பொதுமக்கள், அலுவலர்களுக்கு  தனித்தனி கழிவறைகளும், முதல் தளத்தில் பதிவேடுகள் வைப்பறை, கூட்ட அரங்கு மற்றும் கீழ்தளத்தை போல முதல் தளத்திலும் அறைகள் கட்டப்பட்டது. அருகில் தாசில்தார் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்ட தாலுகா அலுவலகத்தை கடந்த மாதம் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதைதொடர்ந்து நேற்று முன்தினம் வரை தாலுகா அலுவலகம் ஒழுங்குமுறை விற்பனை கட்டிடத்தில் இயங்கி வந்தது. நேற்று முதல் பஞ்சாயத்து யூனியன் அருகே உள்ள புதிய கட்டிடத்தில் தாலுகா அலுவலகம் செயல்பட தொடங்கியது. இதில் அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் போதுமான வசதிகள் உள்ளதால் அலுவலக ஊழியர்கள் உற்சாகத்துடன் பணியாற்றி வருகின்றனர்.

Next Story