மாங்காட்டில் மாயமான என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் கிணற்றில் பிணமாக மீட்பு
மாங்காட்டில் மாயமான என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் ஒருவர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.
பூந்தமல்லி,
குன்றத்தூர் அடுத்த தெற்கு மலையம்பாக்கம் பகுதியில் உள்ள கிணற்றில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு குன்றத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் தீர்த்தகிரி தலைமையில் சென்ற போலீசார், பூந்தமல்லி தீயணைப்பு போலீசார் உதவியுடன் கிணற்றில் கிடந்த ஆண் பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பலியாகி கிடந்தவர் போரூர் அடுத்த முகலிவாக்கத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 47), என்பதும், அவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் என்பதும் தெரியவந்தது.
இவருக்கு திருமணமான நிலையில், மனைவி பிரியாவுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், கடந்த மாதம் 27-ந் தேதி கோவிலுக்கு சென்று விட்டு வருவதாக வீட்டில் இருந்து சென்றவர் மாயமானதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது இந்த கிணற்றில் பிணமாக இறந்து கிடப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து பிணத்தை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை யாரேனும் கொலை செய்து வீசிச்சென்றனரா? என போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் இவர் மாயமானதாக ஏற்கனவே அவரது தந்தை மாங்காடு போலீசில் புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. காணாமல் போன கல்லூரி பேராசிரியர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story