தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து கலெக்டர் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்


தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து கலெக்டர் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 2 March 2021 6:08 AM IST (Updated: 2 March 2021 6:08 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து கலெக்டர் தலைமையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர், 

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பா.பொன்னையா தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து திருமண மண்டபங்கள், அனைத்து வங்கிகளின் மேலாளர்கள், தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் டிஜிட்டல் பேனர் உரிமையாளர்களுடன் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை மாவட்ட கலெக்டர் நடத்தினார்.

பின்னர் கலெக்டர் பா.பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி, தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 26-ந் தேதி அன்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்தது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, மாதவரம், ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், திருவொற்றியூர் ஆகிய 10 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளது.

இங்கு மொத்தம் 4 ஆயிரத்து 902 வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளது. ஆயிரத்து 334 இடங்களில் 4 ஆயிரத்து 902 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 34 லட்சத்து 98 ஆயிரத்து 829 வாக்காளர்கள் உள்ளனர். வேட்புமனுத் தாக்கலுக்கு முன்தினம் வரை வாக்காளர் விவரம் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் மாற்றம் ஆகியவை வருகிற 11-ந் தேதி வரை நடைபெறும்.

மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட 57 ஆயிரத்து 500 வாக்காளர்களும், 18 ஆயிரத்து 738 மாற்றுத்திறன் கொண்ட வாக்காளர்களும் உள்ளனர். வாக்குச்சாவடிக்கு நேரில் வரமுடியாத சூழ்நிலை உள்ளவர்களுக்கு தபால் வாக்கு வாயிலாக வாக்குப்பதிவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

349 மண்டலங்களாக 4902 வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 349 மண்டலங்களுக்கும், மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு பணிகளை மேற்கொள்வர். தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் 30 பறக்கும்படை, 30 நிலைக்குழு, 10 ஒளிப்பதிவு குழு படை அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள், தேர்தல் விதிகளுக்கு புறம்பாக பணம், பொருள்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்கின்றனரா என்பதை கண்காணிக்கின்றனர். 6 ஆயிரத்து 564 கண்ட்ரோல் யூனிட்டுகளும், 8 ஆயிரத்து 388 வாக்குப்பதிவு எந்திரங்களும், 6 ஆயிரத்து 452 வி.வி.பி.ஏ.டி எந்திரங்களும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபட 23 ஆயிரத்து 528 நபர்கள் தயார் நிலையில் உள்ளனர். தேர்தல் தொடர்பான புகார்களை பெற்றுக் கொள்வதற்கு 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. 044- 27661950 மற்றும் 044- 27661951 ஆகிய இரண்டு தொலைபேசி எண்களிலும், 9445911161 மற்றும் 9445911162 ஆகிய இரண்டு வாட்ஸ்-அப் எண்களிலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வித்யா, அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பா.பொன்னையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-

இந்திய தேர்தல் ஆணையத்தின்படி, சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிப்புகள் வெளியானதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காரணத்தினால் வாரந்தோறும் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மக்கள் தொடர்பு திட்ட முகாம் உள்ளிட்ட அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக்கொள்ளப்படும் வரை நடைபெறாது.

பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் வழங்கும் பெட்டியினுள் போடலாம்.

Next Story