குடிநீர் சீராக வினியோகிக்க கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை; சத்தியமங்கலத்தில் பரபரப்பு


குடிநீர் சீராக வினியோகிக்க கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை; சத்தியமங்கலத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 2 March 2021 12:46 AM GMT (Updated: 2 March 2021 12:46 AM GMT)

குடிநீர் சீராக வினியோகிக்க கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் சத்தியமங்கலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலம்
குடிநீர் சீராக வினியோகிக்க கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் சத்தியமங்கலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 
முற்றுகை 
சத்தியமங்கலம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதி ராஜீவ் நகர். இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்களுக்கு குடிநீர் முறையாக கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. 
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்துக்கு நேற்று பகல் 11 மணி அளவில் வந்தனர். பின்னர் அவர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பேச்சுவார்த்தை
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி ஆணையாளர் அமுதா மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘ராஜீவ் நகரில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். கடந்த 1995-ம் ஆண்டு எங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு குழாய் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது எங்கள் பகுதியில் குடியிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதன்காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. மேலும் வீடுகளுக்கு குறைந்த அளவிலேயே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஒரு வீட்டுக்கு 3 குடம் தண்ணீர் கூட கிடைப்பதில்லை. எங்களுக்கு குடிநீர் சீராக கிடைக்கவில்லை என நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்துவிட்டோம். எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களுக்கு குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். 
பரபரப்பு
அதற்கு பதில் அளித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ராஜீவ் நகர் பகுதிக்கு குடிநீர் சீராக வினியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். இதில் பொதுமக்கள் சமாதானம் அடைந்து தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அப்போது நகராட்சி ஆணையாளர் அமுதாவிடம், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர். 
இந்த சம்பவத்தால் நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story