டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மது விற்றால் கடும் நடவடிக்கை- ஈரோடு ஆர்.டி.ஓ. எச்சரிக்கை
டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மது விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ஈரோடு
டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மது விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ஆலோசனை கூட்டம்
ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள மதுபான விடுதிகள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், அச்சகங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
திருமண மண்டபங்களில் ஏற்கனவே பதிவு செய்த விழாக்களை நடத்தி கொள்ளலாம். ஆனால் புதிதாக நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளிக்கும்போது தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். கறி விருந்து, பரிசு பொருட்கள் வினியோகம் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட திருமண மண்டபம் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கடும் நடவடிக்கை
தங்கும் விடுதிகளுக்கு வருபவர்களிடம் அவர்களது அடையாள அட்டையை வாங்கி சரி பார்த்து அறை கொடுக்க வேண்டும். அதிகமான அறைகளை ஒரே தரப்பினர் வாடகைக்கு எடுக்க முயன்றால், அதிகாரிகளிடம் அவசியம் தகவல் தெரிவிக்க வேண்டும். பரிசு பொருட்கள், துணி வகைகளை மொத்தமாக தங்கும் விடுதிகளுக்கு கொண்டு வந்தால், அனுமதிக் கக்கூடாது. தங்கும் வசதியுடன் கூடிய நட்சத்திர பார்கள், உணவகத்துடன் கூடிய நட்சத்திர பார்களில் நேர கட்டுப்பாட்டை சரியாக பின்பற்ற வேண்டும்.
டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மதுவிற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மொத்தமாக மது விற்பனை செய்யக்கூடாது.
நோட்டீசு, பேனர்களை அச்சிடும்போது, அதில் அச்சகத்தின் பெயர், தொலைபேசி எண்ணை குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள், போலீசார், டாஸ்மாக் அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story