காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பைபர் படகுகள் கட்டும் இடத்தில் நிறுத்தி இருந்த விசைப்படகுகள் அகற்றம் - அதிகாரிகள் அதிரடி


காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பைபர் படகுகள் கட்டும் இடத்தில் நிறுத்தி இருந்த விசைப்படகுகள் அகற்றம் - அதிகாரிகள் அதிரடி
x
தினத்தந்தி 2 March 2021 6:54 AM IST (Updated: 2 March 2021 6:54 AM IST)
t-max-icont-min-icon

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பைபர் படகு கட்டும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகளை அதிகாரிகள் அதிரடியாக அப்புறப்படுத்தினர்.

திருவொற்றியூர், 

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 800-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் பைபர் படகுகள் கட்டும் தளத்தில் விசைப்படகுகளை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வருவதால் இடநெருக்கடி காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியது. இதையடுத்து பைபர் படகு உரிமையாளர்கள், காசிமேடு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்திருந்தனர்.

அதன்பேரில் மீன்துறை உதவி இயக்குனர் வேலன் தலைமையிலான அதிகாரிகள், விசைப்படகு உரிமையாளர்களுக்கு விசைப்படகுகளை அகற்றுவது குறித்து நோட்டீஸ் வழங்கினர். ஆனால் அவர்கள் விசைப்படகுகளை அகற்றவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை மீன்வளத்துறை அதிகாரிகள், பைபர் படகுகள் கட்டும் இடத்தில் நிறுத்தி இருந்த விசைப்படகுகளை அகற்றுவதற்காக சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசைப்படகு உரிமையாளர்கள் ஒன்று கூடினர், அதேபோல் அனைத்து பைபர் படகுகளை சேர்ந்த உரிமையாளர்களும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அவசர ஆலோசனைக்கூட்டம் நடத்தினா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் தினகரன் தலைமையில் ஏராளமான போலீசார் உதவியுடன் பைபர் படகு கட்டும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.

Next Story