விழுப்புரத்தில் துணை ராணுவத்தினர், போலீசார் கொடி அணிவகுப்பு
பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழுப்புரத்தில் துணை ராணுவத்தினர், போலீசார் கொடி அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.
விழுப்புரம்,
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர் (தனி), திண்டிவனம் (தனி), மயிலம், செஞ்சி, திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் 2,368 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது.
கடந்த தேர்தல்களில் நடைபெற்ற சிறு, சிறு தகராறு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு விழுப்புரம் மாவட்டத்தில் 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும், 33 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் வெப் கேமிரா பொருத்தப்பட்டு தேர்தல் நிகழ்வுகள் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் மிக பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதோடு உள்ளூர் போலீசாருடன் இணைந்து தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக முதல்கட்டமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு துணை ராணுவத்தினர் 82 பேர் வருகை தந்துள்ளனர்.
கொடி அணிவகுப்பு
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்களிக்கவும், தேர்தலை எவ்வித பிரச்சினையும் இன்றி அமைதியான முறையில் நடத்திடவும், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும் நேற்று மாலை விழுப்புரம் நகரில் துணை ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பு ஒத்திகையை நடத்தினர்.
இந்த கொடி அணிவகுப்பை மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அண்ணாதுரை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராமசாமி, நல்லசிவம் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசாரும், உதவி கமாண்டன்ட் ராஜ்பீர்சிங் தலைமையிலான துணை ராணுவத்தினரும் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இவர்கள் துப்பாக்கிகள் மற்றும் பாதுகாப்பு கவசங்களுடன் விழுப்புரம் ரெயில் நிலைய வளாகத்தில் இருந்து புறப்பட்டு காந்தி சிலை, திரு.வி.க. சாலை, காமராஜர் வீதி, சென்னை நெடுஞ்சாலை, நான்குமுனை சந்திப்பு வழியாக கொடி அணிவகுப்பாக சென்று விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை சென்றடைந்தனர். இந்த அணிவகுப்பில் கலவரத்தை கட்டுப்படுத்தும் வஜ்ரா, வருண் வாகனங்களும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
Related Tags :
Next Story