மின்சார கேபிள், குடிநீர் குழாய் எரிந்து நாசம்


மின்சார கேபிள், குடிநீர் குழாய் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 2 March 2021 10:40 PM IST (Updated: 2 March 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

மின்சார கேபிள், குடிநீர் குழாய் எரிந்து நாசம்

ராமேசுவரம்
பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மின்சார கேபிள், குடிநீர் குழாய் மற்றும் தொலைத்தொடர்பு எரிந்து நாசமானது.
துணை மின் நிலையம்
ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளுக்கு மண்டபம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரமானது மண்டபம் கடற்கரை பூங்கா வரையிலும் மின் கம்பம் மூலமாகவும் மற்றும் மற்றொரு பாதையான பூமிக்கடியில் கேபிள் பதித்து அதன் மூலமும் மின்சாரம் கொண்டு வரப்படுகிறது.
மண்டபம் கடற்கரை பூங்கா பகுதியில் இருந்து பாம்பன் ரோடு பாலத்தின் நடைபாதையில் இரு பகுதி வழியாகவும் மின்சார கேபிள்கள் பாதிக்கப்பட்டு அதன் வழியாக மின்சாரமானது கொண்டு வரப்படுகிறது.
தீப்பிடித்து எரிந்த மின்சார கேபிள்
இந்தநிலையில் பாம்பன் ரோடு பாலத்தின் ஒரு பகுதியில் உள்ள நடைபாதையில் பதிக்கப்பட்டுள்ள மின்சார கேபிள் ஒன்று நேற்று காலை 11 மணி அளவில் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. மின்சார கேபிள் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. அந்த வழியாக இருசக்கர வாகனம் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்ற பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மண்டபம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராமசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாம்பன் பாலத்தில் நடைபாதையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த மின்சார கேபிளை தண்ணீரை பீய்ச்சி அடித்து வேகமாக அணைத்தனர். இதைதொடர்ந்து தீப்பிடித்து எரிந்து சேதமான கேபிளை மண்டபம் மின்வாரிய உதவி மின் பொறியாளர் நித்தியா உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வழக்கம்போல் மின் வினியோகம்
பாம்பன் ரோடு பாலத்தில் தீப்பிடித்து எரிந்த மின்சார கேபிள் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளுக்கு மின்சாரம் கொண்டு கொண்டு செல்ல பயன்பட்டது. மின்சார கேபிள் சுமார் 5 அடி நீளத்திற்கு எரிந்து நாசமாகி இருப்பதும் தெரியவந்தது. மின்சார கேபிள் தீப்பிடித்து எரிந்து சேதமான நிலையிலும் பாம்பன் பாலத்தில் நடைபாதையின் மற்றொரு பகுதியில் பதிக்கப்பட்டுள்ள மின்சார கேபிள் மூலமாக ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிக்கு வழக்கம்போல் மின் வினியோகம் உடனடியாக வழங்கப்பட்டது.
பாலத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் யாரேனும் பீடி அல்லது சிகரெட்டை அணைக்காமல் நடைபாதையில் வீசியிருக்கலாம். அது நடைபாதையில் பதிக்கப்பட்டுள்ள மின்சார கேபிளில் பட்டு காற்றின் வேகத்தால் கேபிள் தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பாம்பன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் மின்சார கேபிள், காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் மற்றும் தொலை தொடர்பு கேபிள்களும் சேதமடைந்துள்ளன.

Next Story