திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்


திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 March 2021 11:00 PM IST (Updated: 2 March 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள பள்ளப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட குட்டியபட்டி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சரிவர குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தண்ணீரை விலைக்கு வாங்கி கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி மன்றம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கிராம மக்கள் புகார் செய்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், நேற்று காலை  திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் குட்டியபட்டி பிரிவு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய், ஜெய்கணேஷ் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடிநீர் பிரச்சினையை தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story