ராசிபுரத்தில் ரூ.90 ஆயிரம் பறிமுதல்: சரக்கு வாகனத்தை சாலையில் நிறுத்தி போராட்டம்


ராசிபுரத்தில் ரூ.90 ஆயிரம் பறிமுதல்: சரக்கு வாகனத்தை சாலையில் நிறுத்தி போராட்டம்
x
தினத்தந்தி 3 March 2021 12:43 AM IST (Updated: 3 March 2021 12:43 AM IST)
t-max-icont-min-icon

சரக்கு வாகனத்தை சாலையில் நிறுத்தி போராட்டம் நடந்தது.

ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர் கேட் பகுதியில் நேற்று ராசிபுரம் சட்டசபை தொகுதி பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறித்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணமின்றி ரூ.90 ஆயிரம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், சரக்கு வாகனத்தில் இருந்தவர்களிடம் உரிய ஆவணங்களை காட்டி ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் பணத்தை பெற்றுக்கொள்ளும்படி கூறினர். 
இதையடுத்து சரக்கு வாகனத்தின் உரிமையாளரான காளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த சிவா பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான உரிய ஆவணங்களுடன் தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள், பணத்தை நாமக்கல் மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளும்படி கூறினர். 
இந்தநிலையில் சிவா, உரிய ஆவணம் வைத்திருந்தும் அதிகாரிகள் தன்னை அலைக்கழிப்பதாக கூறி, தாலுகா அலுவலகம் முன்பு சாலையின் குறுக்கே தனது சரக்கு வாகனத்தை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து, ராசிபுரம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் சிவாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சிவா மறியலை கைவிட்டு அங்கிருந்து தனது வாகனத்தில் புறப்பட்டு சென்றார். 

Next Story