நத்தம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா; பூக்குழி இறங்கி பக்தர்கள் பரவசம்
நத்தம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி பக்தி பரவசத்துடன் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
நத்தம்:
நத்தம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி பக்தி பரவசத்துடன் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
நத்தம் மாரியம்மன் கோவில்
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில், நத்தம் மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் மாசி பெருந்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த மாதம் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் மயில், சிம்மம், அன்னம் போன்ற வாகனங்களில் சர்வ அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல் பால், சந்தனம், தேன் குடங்களை பக்தர்கள் சுமந்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மஞ்சள் திருப்பாவாடை ஊர்வலம், அரண்மனை பொங்கல் வைத்தல், காவடி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் இருந்து பிற்பகல் வரை பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வந்தனர். மேலும் சில பக்தர்கள், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். சில பக்தர்கள், மாறுவேடம் அணிந்து வருகை தந்தனர்.
தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக, கரும்பு தொட்டில்களில் குழந்தைகளை வைத்து கோவில் வளாகத்தை பக்தர்கள் சுற்றி வந்தனர். இதேபோல் அங்கப்பிரதட்சணம் செய்தல், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் போன்ற நிகழ்ச்சிகளிலும் பக்தர்கள் ஈடுபட்டனர்.
பக்தி பரவசத்துடன்...
பூக்குழியில் விறகு கட்டைகளையும், உப்பு, மிளகு பொட்டலங்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். மேள தாளம் முழங்க தாம்பூலத்தில் அர்ச்சனை பொருட்களை மஞ்சள் துணியால் கட்டிக் கொண்டு பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து 15 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கினர். சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பக்தி பரவசத்துடன் 'கோவிந்தா' கோஷம் முழங்க பூக்குழி இறங்கி மெய்சிலிர்க்க வைத்தனர்.
கழுமரம் ஏறும் நிகழ்ச்சி
முன்னதாக கோவில் முன்பு கழுமரம் ஊன்றப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் போட்டி போட்டு கழுமரம் ஏறினர்.
பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, தேனி, விருதுநகர், சென்னை, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மஞ்சள் நீராட்டு விழா
இதற்கிடையே காப்புகட்டி பக்தர்கள் விரதத்தை தொடங்கிய நாளில் ஊன்றப்பட்ட கம்பம், நேற்று இரவு கோவிலில் இருந்து அருகே உள்ள அம்மன் குளத்தில் கொண்டு போய் சேர்க்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) காலை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து இரவில், அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் சர்வ அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி குளக்கரையில் இருந்து புறப்படுகிறார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வரும் அம்மன், பின்னர் கோவிலை வந்தடைகிறார். இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
கூடுதல் பஸ்கள்
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், திருக்கோவில் பூசாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
இதேபோல் குடிநீர், பொது சுகாதார வசதிகளை மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில், நத்தம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி சரவணக்குமார், துப்புரவு ஆய்வாளர் சடகோபி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் இருந்து கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story