கடலூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.52 லட்சம் பறிமுதல்- தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை


கடலூரில்  உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.52 லட்சம் பறிமுதல்- தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 3 March 2021 3:04 AM IST (Updated: 3 March 2021 3:04 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில், 2 இடங்களில் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.52 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

கடலூர், 


தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இதற்கிடையே 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் அதிரடியாக வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடலூர் சின்னகங்கணாங்குப்பத்தில் கலால் தாசில்தார் கலாவதி தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார், ஏட்டுகள் கருணாகரன், தண்டபாணி மற்றும் போலீசார் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

கட்டுக்கட்டாக பணம்

அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த காரை பறக்கும் படையினர் வழிமறித்து சோதனை நடத்தினர். தொடர்ந்து காரில் இருந்த நபர் கையில் வைத்திருந்த பையை திறந்து பார்த்தனர். அதில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது. இது பற்றி அவரிடம் பறக்கும் படையினர் விசாரித்தனர்.

 அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். டிரைவரும் உரிய பதில் அளிக்கவில்லை. அவர் பையில் வைத்திருந்த பணம் பற்றி கேட்ட போது, சுமார் ரூ.50 ஆயிரம் இருக்கும் என்று தெரிவித்தார்.

ஆனால் அதற்கான உரிய ஆவணம் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து அவரை பறக்கும் படையினர் காருடன் கடலூர் தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அவர் வைத்திருந்த மற்றொரு பையையும் சோதனையிட்டனர்.

 பறிமுதல்

அந்த பையில் கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பறக்கும் படையினர், அவரிடம் தொடர்ந்து விசாரித்த போது, அவர் கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த ராம்நாத் பிரசாத் என்றும், அவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், தற்போது பரங்கிப்பேட்டை அருகே தனியார் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்தம் எடுத்து ஆட்களை வைத்து வேலை செய்து வருவதாகவும், அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக பணத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அவர் கொண்டு வந்த பணத்தை பறக்கும் படையினர், வருவாய்த்துறையினர் எண்ணி பார்த்தனர். அதில் ரூ.51 லட்சத்து 36 ஆயிரம் இருந்தது. ஆனால் அந்த பணத்தை கொண்டு வந்ததற்கான எவ்வித ஆவணங்களும் அவரிடம் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, தாசில்தார் பலராமனிடம் ஒப்படைத்தனர். அவர் அந்த பணத்தை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்தார்.

ஆனால் வருமான வரித்துறையினர் யாரும் வராததால், அந்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தார். 

இதேபோல் மற்றொரு இடத்திலும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது பற்றிய விவரம் வருமாறு:-

மளிகைக்கடைக்காரர்

கடலூர் கலால் தாசில்தார் கலாவதி தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று காலை 7 மணி அளவில் கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பம் இரட்டை ரோட்டில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்த போது, அந்த காரில் வந்தவர் ரூ.65 ஆயிரம் எடுத்துச்சென்றது தெரிய வந்தது.

அவரிடம் விசாரித்த போது, அவர் கங்கணாங்குப்பத்தை சேர்ந்த மளிகைக்கடைக்காரர் மணிகண்டன் என்றும், திருச்சிக்கு சென்று மளிகைப்பொருட்கள் வாங்குவதற்காக பணத்தை எடுத்துச்செல்வதாகவும் கூறினார். 

ஆனால் அந்த பணத்திற்கான எவ்வித ஆவணங்களும் அவரிடம் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, தாசில்தார் பலராமனிடம் ஒப்படைத்தனர்.

இருப்பினும் கடலூரில், 2 இடங்களில் ஒரே நாளில் ரூ.52 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story