பொதுமக்கள் சாலைமறியல்
சுரண்டை அருகே பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர்.
சுரண்டை, மார்ச்:
சுரண்டை அருகே உள்ள குருங்காவனம் கிராமத்தை சேர்ந்த கருப்பன் மகன் சுப்பையா. கடந்த மாதம் 25-ஆம் தேதி இவரது மகளின் பூப்புனித நீராட்டு விழா நடந்தது. விழாவில் கலந்து கொள்ள இவரது உறவினர்கள் சாம்பவர்வடகரை அருகிலுள்ள வேலாயுதபுரத்தில் இருந்து வந்தனர். அவர்கள் மெயின் ரோட்டிலிருந்து மேளதாளத்துடன் சுப்பையாவின் வீட்டிற்கு சென்றனர். அப்போது சில நபர்கள் அவர்கள் மீதும், அவர்கள் வந்த வேன் மீதும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சுப்பையா போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த 6 பேர் மீது சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜ் என்பவரை கைது செய்தனர். மற்றவர்கள் கைதுசெய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை உடனடியாக கைது செய்யக்கோரி நேற்று மாலையில் குருங்காவனத்தில் சுரண்டை- பாவூர்சத்திரம் சாலையில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆலங்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னிவளவன், வீ.கே.புதூர் மண்டல துணை தாசில்தார் சிவன்பெருமாள், சுரண்டை வருவாய் ஆய்வாளர் மாரியப்பன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் 5 பேரையும் விரைவில் போலீசார் கைது செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் குருங்காவனம் கிராமத்தில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story