பசுந்தீவன தட்டுப்பாட்டால் வால்பாறையில் இருந்து மீண்டும் கேரளா திரும்பும் காட்டு யானை கூட்டம்
கடும் வெயில் எதிரொலியாக பசுந்தீவன தட்டுப்பாட்டால் வால்பாறையில் இருந்து கேரள வனப்பகுதிக்கு காட்டு யானை கூட்டம் கூட்டமாக திரும்புகின்றன.
வால்பாறை,
காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக வாழும் தன்மை கொண்டது. ஆனால் ஒரே இடத்தில், வனப்பகுதிகளில் தங்கி வாழாது. தங்களது உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் மற்றும் தட்பவெப்ப நிலை மாற்றங்கள் ஆகியவற்றிற்காக இடம் விட்டு இடம் மாறி வாழக்கூடிய விலங்கு ஆகும்.
தற்போது வால்பாறை பகுதியில் கடுமையான வெப்பமான காலசூழ்நிலை தொடங்கி விட்டது. இதனால் வறட்சியான காலநிலை ஏற்பட்டு புற்கள் கருகின.
இதனால் காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு தங்களது தேவைகளை சமாளித்து கொண்டாலும், ஒரு நாளைக்கு சுமார் 250 கிலோ பசுந்தீவனங்களை உண்டு வாழும் காட்டு யானைகளுக்கு அவை ஏற்றதாக இல்லை. இதனால் காட்டு யானைகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதியில் கேரள வனப்பகுதிகளில் இருந்து வால்பாறை வனப்பகுதிகளுக்கு யானைகள் படையெடுத்து வந்தன. தற்போது அடர்ந்த வனப்பகுதிகளை கொண்ட கேரள வனப்பகுதிகளுக்கு மீண்டும் காட்டு யானைகள் படையெடுக்க தொடங்கி விட்டன.
கேரளாவில் இருந்து கூட்டமாக வந்த இந்த யானைகள், வால்பாறை வனப்பகுதிகளுக்கு வந்து தீவனம் மற்றும் தண்ணீர் இருக்க கூடிய இடங்களில் சிறு,சிறு கூட்டங்களாக பிரிந்து சுற்றித்திறிந்து வந்தன.
தற்போது கேரள வனப்பகுதிகளுக்கு திரும்பி செல்லும் போது சிறு, சிறு கூட்டங்கள் எல்லாம் ஒன்றாக சோ்ந்து ராஜநடை போட்டு செல்கின்றன.
வனப்பகுதிகளின் பெருக்கத்திற்கும் செழிப்பான வனப்பகுதிகள் அமைவதற்கும் காரணமாக விளங்கி வரும் காட்டு யானைகள் வரலாற்று காலத்தில் இருந்தே தமிழகம் மற்றும் கேரள வனப்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து சென்று வாழ்ந்து வந்தவைகள்.
இதனால் தான் தமிழக வனப்பகுதிகளில் உள்ள செடி, கொடிகள், மரங்கள் கேரள வனப்பகுதியிலும் இருக்கிறது.
யானைகளால் உருவாக்கப்பட்ட தமிழக-கேரள வனப்பகுதிகளின் காரணமாக தென்மேற்கு பருவமழை தவறாமல் கிடைத்து வருகிறது.
இதனால் இயற்கை நீரூற்றுகள் வனப்பகுதிகளில் அதிகளவில் உண்டாகி ஆறுகள் உருவாகி உள்ளது. இதன் காரணமாக அணைகளுக்கு தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கிறது.
தற்போது வால்பாறை பகுதியில் தேயிலை தோட்டங்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகள், அணைக்கட்டுகள், சாலைகள், தொழிற்சாலைகள், உருவாக்க காடுகள் அழிக்கப்பட்டதால் காட்டு யானைகள் நடமாடி வந்த வாழ்விடங்கள் பாதிக்கப்பட்டு காட்டுயானைகள் எண்ணிக்கை குறைந்து விட்டன.
ஆனாலும் தொன்றுதொட்டு நடமாடி வந்த இடங்களை யானைகளின் சந்ததிகள் மறக்காமல் வைத்து அந்த பகுதிக்கு வருகின்றன. இதன் அடிப்படையில்தான் வால்பாறை பகுதிக்கு செப்டம்பர் மாதம் வரக்கூடிய யானைகள் கூட்டம் ஒரு வனப்பகுதியில் இருந்து மற்றொரு வனப்பகுதிக்கு செல்வதற்கு தேயிலை தோட்டங்கள் வழியாகவும், தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகள் வழியாகவும் செல்லவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.
இந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக மனித-வனவிலங்குகள் மோதல் ஏற்பட்டு விடுகிறது. இதை தவிர காட்டு யானைகளால் மனிதர்களுக்கு எந்த விதமான பாதிப்புகளும் ஏற்பட்டதில்லை.
தற்போது கருமலை, அய்யர்பாடி, புதுத்தோட்டம், பச்சைமலை, பழைய வால்பாறை, வில்லோணி ஆகிய எஸ்டேட் வனப்பகுதிகளில் முகாமிட்டிருந்த குட்டிகளுடன் கூடிய 15-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் பட்டப்பகலில் உருளிக்கல் எஸ்டேட் 60 ஏக்கர் வனப்பகுதி அருகே ஒன்று சேர்ந்து கேரள வனப்பகுதிக்கு சென்றது.
இதேபோல் தாய்முடி, நல்லமுடி, பன்னிமேடு, கெஜமுடி உள்ளிட்ட எஸ்டேட் வனப்பகுதிகளில் முகாமிட்டு சுற்றித்திறிந்து வந்த காட்டு யானைகள் கூட்டமும் ஒன்று சேரத்தொடங்கி வருகிறது.
இதனால் தமிழக-கேரள எல்லை பகுதியை ஒட்டியுள்ள எஸ்டேட் பகுதி மக்கள் இன்னும் ஒருசில நாட்களுக்கு வேலைக்கு செல்லும் போதும் வரும் போதும் கவனமாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வனத்துறையினரும் தமிழக- கேரள எல்லை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story