சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட பேச்சுவார்த்தை
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அர்ஜூன் சம்பத் கூறினார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் உள்ள இந்து மக்கள் கட்சி அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து நிர்வாகிகள் மனுத்தாக்கல் செய்தனர்.
பின்னர் கோவை தெற்கு மாவட்ட தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும், ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் தேர்தல் கூட்டணிக்கு மற்ற மதத்தின் தலைவர்களை சந்தித்து பேசுகின்றனர். ஆனால் இந்து மடாதிபதிகள், இந்து இயக்க தலைவர்களை சந்தித்து பேசுவதில்லை.
ஆன்மிக அரசியலை முன் நிறுத்தி சட்டமன்ற தேர்தலில் களம் இறங்க முடிவு செய்து உள்ளோம். தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
5 இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று கேட்டு உள்ளோம். பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படவில்லை என்றால் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story