பூங்காவில் விளையாடிய போது பரிதாபம் மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் பலி


பூங்காவில் விளையாடிய போது பரிதாபம் மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் பலி
x
தினத்தந்தி 3 March 2021 11:05 AM IST (Updated: 3 March 2021 11:05 AM IST)
t-max-icont-min-icon

பூங்காவில் விளையாட சென்றபோது மின்விளக்கில் பாய்ந்த மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் பரிதாபமாக பலியானான்.

தாம்பரம், 

தாம்பரம் அடுத்த சக்தி நகர், ஹவுஸிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் வரதன் (வயது 45). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு நிஷா (32) என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இதில் இவர்களது மூத்த மகன் கவுதம் (8) நேற்று மதியம் வீட்டின் அருகே உள்ள பீர்க்கன்காரணை பேரூராட்சிக்கு உட்பட்ட பூங்காவில் விளையாடுவதற்காக சென்றான்.

அப்போது பூங்காவில் இருந்த மின்விளக்கில் வெளியே தெரியும்படி தொங்கி கொண்டிருந்த மின் கம்பி சிறுவன் மீது உரசியதால் அதில் இருந்து கசிந்த மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

இந்த நிலையில், விளையாட சென்ற மகன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் தாய் நிஷா தேடி பூங்காவுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பூங்காவில் கவுதம் மின்சார கம்பியை பிடித்தவாறு கீழே விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த நிஷா கூச்சலிட்டார்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து கவுதமை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த கவுதமின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பீர்க்கன்காரணை பேருராட்சி அதிகாரிகளின் அலட்சிய போக்கே சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் என கூறி தாம்பரம்-முடிச்சூர் பிரதான சாலையில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்த தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின் ராஜ் தலைமையில் போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, அவர்களை அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் உடலை கைப்பற்றிய பீர்க்கன்காரணை போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story