கோவில்பட்டி யூனியனுடன் இளையரசனேந்தல் பிர்காவை இணைக்காவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு கிராம மக்கள் அறிப்பு


கோவில்பட்டி யூனியனுடன் இளையரசனேந்தல் பிர்காவை இணைக்காவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு  கிராம மக்கள் அறிப்பு
x
தினத்தந்தி 3 March 2021 10:06 PM IST (Updated: 3 March 2021 10:06 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி யூனியனுடன் இளையரசனேந்தல் பிர்காவை இணைக்காவிட்டால் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்று கிராம மக்கள் அறிவித்தனர்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி யூனியனுடன் இளையரசனேந்தல் பிர்காவை இணைக்காவிட்டால் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்று கிராம மக்கள் அறிவித்தனர்.

தேர்தல் புறக்கணிப்பு

கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பிர்காவுக்கு உட்பட்ட பகுதிகள் கடந்த 2008-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. தொடர்ந்து கல்வி, மின்சாரம், வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்துடன் இணைக்கப்பட்டது.

ஆனால் உள்ளாட்சி துறை மட்டும் தற்போதைய தென்காசி மாவட்டம் குருவிகுளம் யூனியனிலே செயல்படுகிறது. இதனால் இளையரசனேந்தல் பகுதி மக்கள் பல்வேறு தேவைகளுக்காக நீண்ட தொலைவில் உள்ள குருவிகுளம் யூனியன் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. 

எனவே இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

சமாதான பேச்சுவார்த்தை கூட்டம்

இதையடுத்து இளையரசனேந்தல் தனியார் மண்டபத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம்  நடந்தது. திருவேங்கடம் தாசில்தார் கண்ணன் தலைமை தாங்கினார். தேர்தல் துணை தாசில்தார் ஜெயமுருகன், வருவாய் ஆய்வாளர் வீரலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தாசில்தார் பேசுகையில், ‘இளையரசனேந்தல் பிர்கா இணைப்பு குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மூலம் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். தற்போதைய கூட்ட விவரம் குறித்தும் சங்கரன்கோவில் உதவி கலெக்டர் மூலம் அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும்’ என்று தெரிவித்தார்.

உடன்பாடு ஏற்படவில்லை

அப்போது கிராம மக்கள் கூறுகையில், ‘இளையரசனேந்தல் பிர்கா தொடங்கப்பட்ட 13 ஆண்டுகளில் பல்வேறு தேர்தல்களை சந்தித்துள்ளோம். ஆனால் இன்னும் எங்களின் கோரிக்கை நிறைவேறவில்லை. எனவே இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்காவிட்டால் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம்’ என்று தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் உடன்பாடு ஏற்படாததால் தோல்வியில் முடிந்தது.

Next Story