தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ளதால் கட்சி கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம் தொப்பிகள் விற்பனையும் அதிகரிப்பு


தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ளதால் கட்சி கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம் தொப்பிகள் விற்பனையும் அதிகரிப்பு
x
தினத்தந்தி 3 March 2021 10:47 PM IST (Updated: 3 March 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ளதால் கட்சி கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தொப்பிகள் விற்பனையும் அதிகமாக உள்ளது.

திருப்பூர்
தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ளதால் கட்சி கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தொப்பிகள் விற்பனையும் அதிகமாக உள்ளது.
ஆர்டர்கள் 
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி உள்ளன. ஒரு புறம் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளும், மறுபுறம் வாக்குசேகரிப்பு செய்யும் யுக்திகள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
தேர்தல் பிரசாரம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது கட்சி கொடிகள் மற்றும் சால்வைகள் தான். அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது கட்சி சின்னம் மற்றும் கட்சிகொடி வண்ணங்களில் தொப்பி, சால்வைகள் போன்றவற்றை அணிந்து சென்று வாக்கு சேகரிப்பார்கள்.
இந்நிலையில் இதனை தயாரித்து கொடுக்கவும் திருப்பூரில் ஏராளமான ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் இருந்து வருகின்றன. தேர்தலின் போது இந்த நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கும். அதன் அடிப்படையில் தயாரிப்பு பணியும் மும்முரமாக நடைபெறும். இதற்கிடையே தற்போது தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ளதால், திருப்பூரில் உள்ள நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் குவிந்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் கட்சி கொடிகளுக்கான ஆர்டர்கள் வந்துகொண்டிருக்கிறது.
கட்சி கொடி தயாரிப்பு தீவிரம் 
இது குறித்து கொடி தயாரிப்பாளர் மகேஷ் கூறியிருப்பதாவது:-
சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அதிகளவு ஆர்டர்கள் கட்சி கொடிகளுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கொடி தயாரிப்பும் தீவிரமாக நடந்து வருகிறது. ரூ.13 முதல் ரூ.80 வரை கொடிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் கேரளாவிற்கு 75 ஆயிரம் கொடிகள் அனுப்பிவைக்கப்பட்டன.
இதுபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் என இதுவரை ஆயிரக்கணக்கில் கொடிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால், ஆர்டர்கள் குவிந்து வருகிறது. மேலும், ஆர்டர்கள் அதிகரிக்கும் என எதிர்பார்த்துள்ளோம். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கட்சி தொப்பி ஆர்டர்களும் அதிகமாக கிடைத்து வருகிறது. தொப்பிகள் விற்பனையும் அதிகமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story