விழுப்புரம் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம்


விழுப்புரம் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 3 March 2021 10:50 PM IST (Updated: 3 March 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் பூந்தோட்டத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் பூந்தோட்டம் சின்னப்பா லே-அவுட் பகுதியில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர், முருகனுக்கு ராஜகோபுரமும், அங்காளம்மனுக்கு விமான கோபுரமும், புதியதாக கொடிமரம், பாவாடைராயர் சன்னதி மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் புதியதாக சன்னதிகள் அமைக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டது.

இந்த திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கோவிலின் மகா கும்பாபிஷேக விழா கடந்த 1-ந் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தன பூஜை, கோ பூஜை, நவக்கிரக ஹோமம், லட்சுமி பூஜை ஹோமம், பூர்ணாகுதி, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம், ரக்‌ஷாபந்தனம், கும்ப அலங்காரம், முதல்கால யாக பூஜை, மகா பூர்ணாகுதியும், நேற்று முன்தினம் 2 மற்றும் 3-ம் கால யாக பூஜை, பாவாடைராயர் கரிகோலம் வருதல், கண் திறத்தல், யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், ஹோமங்களும் நடந்தது. 

கும்பாபிஷேகம்

இதனை தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு மேல் 4-ம் கால யாக பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, மகா பூர்ணாகுதி யாத்ராதானமும், 9.15 மணிக்கு கடம் புறப்பாடாகி 9.45 மணியளவில் கோவிலின் விமான கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை சந்திரசேகர குருக்கள் நடத்தி வைத்தார். இதில் விழுப்புரம் பூந்தோட்டம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சேகர், ஆனந்தன், காசிநாதன் மற்றும் பூந்தோட்டம் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story