கோத்தகிரியில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.2¼ லட்சம் பறிமுதல்
கோத்தகிரியில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.2¼ லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
கோத்தகிரி,
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து நீலகிரி மாவட்டம் முழுவதும் சோதனைச்சாவடிகள் மற்றும் பல்வேறு இடங்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
அந்த வழியாக வரும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலரின் வாகனங்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்யப்படுகிறது. தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் பறக்கும் படை அலுவலர் அய்யப்பன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மொய்தீன் அடங்கிய குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த அரவேணு பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.70 ஆயிரம் செய்யப்பட்டது.
இதேபோல மாலையில் கட்டப்பொட்டு பகுதியில் பறக்கும்படை அலுவலர் முபாரக் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்டை சேர்ந்த மனோகரன் என்பவர் காரை சோதனை செய்தனர்.
இதில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நேற்று ஒரே நாளில் கோத்தகிரி பகுதியில் ரூ.2 லட்சத்து 16 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் குன்னூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் அந்த தொகைக்கான உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story