துணை ராணுவத்தினருக்கு கொரோனா தடுப்பூசி
தேர்தல் பணியில் ஈடுபடும் துணை ராணுவத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
மதுரை,
தேர்தல் பணியில் ஈடுபடும் துணை ராணுவத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
கொரோனா தடுப்பூசி
தமிகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி மாதம் 16-ந்தேதி மதுரையில் தொடங்கி வைத்தார். அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்பூசி போடுவதற்காக, தனித்தனி கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில் அரசு மற்றும் தனியார் என 61 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. மதுரை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 488 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 2,631 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 1-ந்தேதியில் இருந்து 60 வயதிற்கு மேற்பட்டவர் களுக்கும், 45 முதல் 59 வயது வரை உள்ள இணை நோயாளிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதுபோல், சட்டமன்ற தேர்தலில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 2,326 பேர் 60 வயதை கடந்தவர்கள், 931 பேர் இணை நோயாளிகள்.
துணை ராணுவத்தினர்
இந்தநிலையில், தேர்தல் பணிக்காக அசாமில் இருந்து ரெயில் மூலம் மதுரைக்கு வந்துள்ள துணை ராணுவத்தினருக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள், துணை ராணுவத்தினர் தங்கியிருக்கும் அவனியாபுரம் அருகே உள்ள அயன்பாப்பாக்குடி நடுநிலைப்பள்ளிக்கு சென்று அங்கு தங்கியிருந்த 106 துணை ராணுவத்தினருக்கு தடுப்பூசி போட்டனர்.
இதுபோல், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மதுரை மாவட்ட கலெக்டர் அன்பழகன், 2-ம் கட்டமாக கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அர்ஜூன்குமார், டீன் சங்குமணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story