கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம்
கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவை,
கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு கோவில் திருவிழா கடந்த மாதம் 16-ந்தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த 23-ந்தேதி கோவில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
இதனைதொடர்ந்து 24 ந்தேதி முதல் 1 ந் தேதி வரை கோனியம்மன் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் சிம்ம, அன்னம், வெள்ளையானை, கிளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதன்பின்னர் நேற்று முன்தினம் கோனியம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சூழ கோனியம்மனுக்கு மங்கல நாண் அணிவிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக ராஜவீதியில் உள்ள கோனியம்மன் திருத்தேரை அலங்கரிக்கும் பணி நடந்தது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மதியம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் இருந்து அம்மன் சிலை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி ராஜவீதியில் உள்ள தேர்நிலை திடலுக்கு கொண்டுவரப்பட்டது.அங்கு வேதமந்திரம் முழங்க அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கோனியம்மன் எழுந்தருளினார்.
நேற்று காலை முதல் ராஜவீதியில் திருத்தேர் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிய தொடங்கினார்கள். அவர்கள் திருத்தேரில் எழுந்தருளிய கோனியம்மனை தரிசித்தனர். ஏராளமான பக்தர்கள் உப்பு, மிளகு வாங்கி திருத்தேர் மீது வீசி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். மதியம் 2.16 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பேரூர் இளையபட்டம் மருதாச்சல அடிகளார், சரவணம்பட்டி கவுமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்நாதன், உதவி ஆணையர் ராஜலட்சுமி, செயல் அலுவலர் கைலாச மூர்த்தி, முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, கோவை மாநகர் வடக்கு மாவட்ட த.மா.கா. தலைவர் சி.ஆர்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் திருத்தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து தேர்நிலைத்திடலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் ஆடி அசைந்து ஒப்பணக்கார வீதியை நோக்கி வந்தது. திருத்தேரின் முன்பும், பின்பும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கி விட கூடாது என்பதற்காக திருத்தேரின் இருபுறமும் நீண்ட கயிற்றை கட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்த தேர் பக்தர்கள் வெள்ளத்தில் திருத்தேர் ஆடி அசைந்து வந்தது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள். திருத்தேர் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதி வழியாக மாலையில் தேர்நிலைத்திடலை வந்து அடைந்தது.
கோலாகலமாக நடந்த கோவில் தேரோட்டத்தையொட்டி இந்து அமைப்புகள், வியாபாரிகள் சங்கத்தினர் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் மோர், குளிர்பானங்கள் உள்ளிட்டவையும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த தேரோட்டத்தை முன்னிட்டு மதநல்லிணக்கமாக கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள கோவை அத்தர் ஜமாத் பள்ளிவாசல் சார்பில் பக்தர்களுக்கு இலவச தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.
கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி நேற்று மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். கடந்த ஆண்டு பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்தி பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் அரங்கேறின.
இந்த ஆண்டும் அதுபோன்று நடப்பதை தடுப்பதற்காக பக்தர்கள் கூட்டத்தில் திருடர்கள் ஊடுருவி உள்ளனரா? என்பது குறித்து சீருடை அணியாத போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதுதவிர பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலமும் பக்தர்களின் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) பரிவேட்டை, குதிரை வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியும், நாளை (வெள்ளிக்கிழமை) தெப்ப திருவிழா, நாளை மறுநாள் (சனிக்கிழமை) தீர்த்தவாரி கொடியிறக்கம், 8ந் தேதி வசந்த விழாவுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.
Related Tags :
Next Story