தினத்தந்தி செய்தி எதிரொலி 4 வழிச்சாலையில் கிணத்துக்கடவு செல்ல வழிகாட்டி பலகை
தினத்தந்தி செய்தி எதிரொலியாக கோவை பொள்ளாச்சி 4 வழிச் சாலையில் கிணத்துக்கடவு செல்ல வழிகாட்டி பலகை வைக்கப் பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கிணத்துக்கடவு,
கோவை-பொள்ளாச்சி இடையே 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டபின் சாலையை கடப்பதற்கு வசதியாக தலா 2½ கி.மீ. தூரத்துக்கு இடைவெளி விடப்பட்டு உள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் சாலையின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு திரும்பி செல்ல வசதியாக இருக்கிறது.
தற்போது கிணத்துக்கடவு பகுதியில் 2½ கி.மீ. தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. மேலும் சிங்கராம்பாளையம் பிரிவு முதல் சாலைப்புதூர் பெட்ரோல் பங்க் வரை சர்வீஸ் சாலை அமைக்கும் பணி முடிந்து உள்ளது. இதனால் மேம்பாலத்தின் அருகே இருந்த இடைவெளி அடைக்கப்பட்டது.
பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வரும் வாகன ஓட்டிகளுக்கு, தெரியாததால் அவர்கள் கிணத்துக்கடவை தாண்டி செல்லும் நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வந்தனர்.
இது குறித்து கடந்த 1-ந் தேதி தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக தற்போது சர்வீஸ் சாலை தொடங்கும் சிங்கராம்பாளையம் பிரிவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர்குமார் ஆய்வு செய்து தற்காலிகமாக சாலை தடுப்பான் மூலம் வழிகாட்டி பலகை அமைத்து உள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
இந்த சாலையில் புதிதாக வந்தால் கிணத்துக்கடவு செல்லும் பாதை தெரியாமல் 4 வழிச்சாலையிலேயே செல்வதால் 3 கி.மீ. தூரம் கடந்து பின்னர் திரும்பி வர வேண்டிய நிலை இருந்தது.
தற்போது வழிகாட்டி பலகை வைத்ததால் புதிதாக வரும் வாகன ஓட்டிகளுக்கு பயனாக இருக்கிறது. எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த போலீசாருக்கும் பாராட்டுக்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story