கோவில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு


கோவில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு
x
தினத்தந்தி 4 March 2021 12:36 AM IST (Updated: 4 March 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

முள்ளிப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் 16 பேர் காயம் அடைந்தனர்.

காரையூர், மார்ச்.4-
முள்ளிப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் 16 பேர் காயம் அடைந்தனர்.
ஜல்லிக்கட்டு
காரையூர் அருகே உள்ள முள்ளிப்பட்டியில்  முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தற்போது, தேர்தல் நடத்தை நடைமுறையில் இருப்பதால் மதுரை ஐகோர்ட்டு கிளையின்  ஒப்புதலைப் பெற்றும், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டன.
முன்னதாக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு  மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் மாடுபிடி வீரர்களை பரிசோதனை செய்தனர். இதில் 235 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு களத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
672 காளைகள்
தொடர்ந்து ஜல்லிக்கட்டை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி கொடியசைத்து தொடங்கி வைத்தனர். வாடிவாசலில் முதல் காளையாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதை தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். அதன் பின்னர் அலங்கரிக்கப்பட்ட உள்ளூர் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த 672 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளைகளில் பல காளைகள் மின்னல் வேகத்தில் சென்றன. சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை அருகில் நெருங்க விடாமல் மிரட்டின. இருப்பினும் பல காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.
16 பேர் காயம்
இதில் மாடுபிடி வீரர்கள் 8 பேரும், பார்வையாளர்கள் 4 பேரும், மாடு உரிமையாளர்கள் 4 பேரும் என 16 பேர் காயம் அடைந்தனர். இதில் மாடுபிடி வீரர் வளதாடிப்பட்டி நடராஜன் மகன் ராகுல் (வயது 22), பார்வையாளர் நல்லூர் தங்கவேல் மகன் சங்கர் (37) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
 பொன்னமராவதி தாசில்தார் ஜெயபாரதி, துணை தாசில்தார்கள் பிரகாஷ் மற்றும் அலுவலர்கள் ஜல்லிக்கட்டு விதிமுறைபடி நடத்தப்படுகிறதா? என்பதை கண்காணித்தனர். இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்படாமல் இருப்பதற்காக இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மொழிஅரசு தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story