நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் மூழ்கி இசை கலைஞர்கள் 2 பேர் பலி
நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் மூழ்கி இசை கலைஞர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் மூழ்கி இசை கலைஞர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இசை கலைஞர்கள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாநகரை சேர்ந்த தியாகராஜன் மகன் வசந்த் (வயது 19), வேலுச்சாமி மகன் ஹரிஷ் (18). இவர்கள் 2 பேரும் அதே பகுதியை சேர்ந்த பேண்ட் இசைக்குழுவில் கலைஞர்களாக வேலை செய்து வந்தனர்.
இந்தநிலையில் நிலக்கோட்டை அருகே சிவஞானபுரத்தில் நேற்று நடந்த காதணி விழாவில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக வசந்த், ஹரிஷ் உள்பட 17 பேர் கொண்ட இசைக்குழுவினர் அங்கு சென்றனர். இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் இசைக்குழுவை சேர்ந்த அனைவரும் சிவஞானபுரம் அருகே உள்ள வைகை ஆற்றில் குளிக்க சென்றனர்.
ஆற்றில் மூழ்கினர்
ஆற்றில் அவர்கள் அனைவரும் குளித்து கொண்டிருந்தபோது, வசந்த் மற்றும் ஹரிஷ் இருவர் மட்டும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதில் அவர்கள் 2 பேரும் ஆற்று நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதை பார்த்த மற்ற இசை கலைஞர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஆற்றில் மூழ்கிய 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் வசந்தும், ஹரிசும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
இதையடுத்து 2 பேரின் உடல்களும் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். பின்னர் வசந்த், ஹரிசின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வைகை ஆற்றில் மூழ்கி இசை கலைஞர்கள் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story