நாமக்கல், திருச்செங்கோட்டில் வாகன சோதனையில் ரூ.2.40 லட்சம் பறிமுதல்


நாமக்கல், திருச்செங்கோட்டில் வாகன சோதனையில் ரூ.2.40 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 3 March 2021 10:36 PM GMT (Updated: 3 March 2021 10:40 PM GMT)

நாமக்கல், திருச்செங்கோட்டில் வாகன சோதனையில் ரூ.2.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாமக்கல்,

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் என மொத்தம் 36 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று நாமக்கல் அருகே உள்ள என்.புதுப்பட்டி பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவை சேர்ந்த கார்த்திக் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த காரை மறித்து சோதனை செய்தபோது பெங்களூருவை சேர்ந்த பிரதீப் (வயது 36) என்பவர் உரிய ஆவணம் இன்றி காரில் ரூ.1 லட்சம் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதுதொடர்பாக அதிகாரிகள் பிரதீப்பிடம் விசாரணை செய்தபோது அவர், தான் பிஸ்கட் கம்பெனி ஒன்றில் டீலராக பணியாற்றி வருவதாகவும், வேலை ஆட்களுக்கு சம்பளம் கொடுக்க பணத்தை எடுத்து செல்வதாகவும் கூறி உள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

திருச்செங்கோடு

இதேபோல திருச்செங்கோடு கோழிக்கால்நத்தம் ரோடு வைகுந்தம் பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை மறித்து சோதனை செய்தபோது ரஞ்சித் என்பவர் உரிய ஆவணம் இன்றி ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Next Story