சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் ரூ.28 லட்சம் செல்போன்கள், மடிக்கணினியும் சிக்கியது


சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் ரூ.28 லட்சம் செல்போன்கள், மடிக்கணினியும் சிக்கியது
x
தினத்தந்தி 4 March 2021 12:16 AM GMT (Updated: 4 March 2021 12:16 AM GMT)

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 420 கிராம் தங்கம் மற்றும் ரூ.28 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள், வௌிநாட்டு சிகரெட்டுகள், மடிக்கணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாய் விமானம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது துபாய் விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த நைனா முகமது (வயது 41), திருச்சியை சேர்ந்த ஜாகீர் உசேன் (49), அஜித் அகமது (26) ஆகிய 3 பேரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். 3 பேரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

ரூ.1½ கோடி தங்கம்

அதில் ரூ.28 லட்சம் மதிப்புள்ள 19 விலை உயர்ந்த செல்போன்கள், 51 சிகரெட்டு பாக்கெட்டுகள், 15 ஏர்பேடுகள், 18 மடிக்கணினிகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 3 பேரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அதில் அவர்களது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். இவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 420 கிராம் எடை கொண்ட தங்கத்தையும் கைப்பற்றினர்.

இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

 


Next Story