கர்நாடகத்தில் பல்வேறு சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்ய ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் உயர்மட்ட குழு; கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் முடிவு


கர்நாடக சட்டத்துறை மந்திரி பசவராஜ் பொம்மை
x
கர்நாடக சட்டத்துறை மந்திரி பசவராஜ் பொம்மை
தினத்தந்தி 4 March 2021 2:48 AM GMT (Updated: 4 March 2021 2:48 AM GMT)

கர்நாடகத்தில் பல்வேறு சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்ய ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைமையில் உயர்மட்ட குழு அமைக்க மந்திரிசபை முடிவு செய்துள்ளது.

மந்திரிசபை கூட்டம்
கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:-

பஞ்சமசாலி, குருப, வால்மீகி உள்ளிட்ட பல்வேறு சமூகங்கள் இட ஒதுக்கீடு குறித்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. குறிப்பாக பஞ்சமசாலி சமூகத்தினர் தங்களை 2ஏ பிரிவில் சேர்க்க வேண்டும் என்றும், குருப சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், வால்மீகி சமூகத்தினர் தங்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டு போராட்டம் நடத்துகிறார்கள்.

இந்த இட ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்து அறிக்கை வழங்க ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைமையில் 3 ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய உயர்மட்ட குழு அமைக்க மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கண்காணிப்பு கேமரா
இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை மீறக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. ஒருவேளை அந்த அளவை அதிகரிக்க வேண்டுமென்றால் அது தொடர்பான விவரங்களை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்துவிட்டது. இதனால் நமக்கு சரியான வழிகாட்டுதல் வேண்டும் என்ற காரணத்தினால் இந்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை முதல்-மந்திரி எடியூரப்பா நியமனம் செய்வார்.

கர்நாடகத்தில் ஆயுஸ் கல்லூரி ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழக மானிய குழுவின் பரிந்துரைப்படி சம்பளம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கர்நாடகத்தில் ஏற்கனவே 774 போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ரூ.18 கோடி செலவில் 281 போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

திடக்கழிவு மேலாண்மை
கடல்சார் வாரியத்திற்கு முதல்-மந்திரி தலைவராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்யாண கர்நாடக மேம்பாட்டு வாரியம் சார்பில் கல்யாண கர்நாடக மாணவர்கள் பெங்களூருவில் தங்கி கல்வி கற்க வசதியாக விடுதிகள் கட்ட ரூ.59 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. பங்காருப்பேட்டையில் சிவில் கோர்ட்டு கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு சூர்யாநகர் பகுதிக்கு குடிநீர் வழங்க ஒரு கிராம குடிநீர் திட்டம் அமல்படுத்தப்படும்.

பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு மாநகராட்சியின் பங்கு 51 சதவீதமும், மாநில அரசின் பங்கு 49 சதவீதமும் இருக்கும். கூடுதல் தலைமை செயலாளர் இதன் தலைமை செயல் அதிகாரியாக செயல்படுவார். பெங்களூருவில் தினசரி 5,500 டன் குப்பைகள் சேருகின்றன. இவற்றை சரியான முறையில் நிர்வகிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிறுவனம் அமைத்துள்ளோம். குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

போலீசார் விசாரணை
பாலியல் புகாரை அடுத்து ரமேஷ் ஜார்கிகோளி மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. கப்பன்பார்க் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story