அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர் காத்திருப்பு போராட்டம்


அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 4 March 2021 6:24 AM GMT (Updated: 4 March 2021 6:24 AM GMT)

பொன்னேரியை அடுத்த சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஞாயிறு ஊராட்சி.

பொன்னேரியை அடுத்த சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஞாயிறு ஊராட்சி. ஊராட்சி மன்ற தலைவராக எல்லையன் இருந்து வருகிறார். இவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி சோழவரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கியுள்ளார். ஆனால் இதுநாள் வரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் பல ஆண்டுகளாக பழுதடைந்துள்ள கண்ணம்பாளையம் ஆரம்ப பள்ளி கட்டிடத்தை அப்புறப்படுத்த வேண்டும், பசுவன்பாளையத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும், அட்டப்பாளையத்தில் ரேஷன் கடை கட்டிடம் கட்டிதர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எல்லையன் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை சோழவரம் ஒன்றிய அலுவலக நுழைவு வாயில் முன்பு படியில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதை அறிந்த சோழவரம் ஒன்றிய அதிகாரிகள் நீண்ட போராட்டத்திற்கு பின்பு ஊராட்சி மன்ற தலைவரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி கடிதம் வழங்கப்பட்டதையடுத்து அவர் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டார்.

 


Next Story