மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 4 March 2021 5:03 PM GMT (Updated: 4 March 2021 5:03 PM GMT)

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மன்னார்குடி:-
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
ராஜகோபாலசாமி கோவில்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் பிரசித்திப்பெற்ற வைணவ கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். 
அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பெருமாள் சன்னதி முன்பு உள்ள கொடி மரத்தில் கருடன் உருவம் பொறிக்கப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
சாமி வீதி உலா
விழாவையொட்டி தினமும் பஞ்சமுக அனுமார், கண்ட பேரண்ட பட்சி, சிம்ம வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 
விழாவில் கருடசேவை வருகிற 15-ந் தேதி நடக்கிறது. அதைத்தொடர்ந்து 19-ந் தேதி வெண்ணெய்த்தாழி உற்சவம் நடக்கிறது. அப்போது தவழும் கண்ணன் திருக்கோலத்தில் ராஜகோபாலசாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். 20-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
காஞ்சி சங்கராச்சாரியார் வழிபாடு
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் நேற்று காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு செய்தார். அவருக்கு தேரடி முதல் கோவில் வாசல் வரை பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற சங்கராச்சாரியார் கோவிலில் உள்ள செங்கமலத்தாயார் சன்னதி மற்றும் ராஜகோபாலசுவாமி சன்னதிக்கு சென்று வழிபாடு நடத்தினார். இதனைத்தொடர்ந்து கோவிலில் உள்ள அச்சுதப்ப நாயக்கர் சிலை அருகே ஆலய தீட்சிதர்கள் விஜயேந்திர சுவாமிகளுக்கு மரியாதை செலுத்தினர். ராஜகோபாலசாமி கோவிலுக்கு வந்த காஞ்சி சங்கராச்சாரியாரிடம் ஏராளமான பக்தர்கள் ஆசி பெற்றனர். 
நீடாமங்கலம்
இதேபோல் நீடாமங்கலம் அருகே ஞானபுரியில் உள்ள 33 அடி உயர ஆஞ்சநேயர் கோவிலிலும் சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு செய்தார். இதையடுத்து ஸ்ரீவித்யா பீடம் கிருஷ்ணானந்த தீர்த்த சுவாமிகளும், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். இதில் கோவில் ஸ்தாபகர் ரமணி அண்ணா, மட நிர்வாகி சந்திரமவுலீஸ்வரர், சிட்டி யூனியன் வங்கி நிர்வாகஇயக்குனரும், முதன்மை செயல் அதிகாரியுமான காமகோடி, நாராயணி நிதி நிறுவன தலைவர் கார்த்திகேயன், கோவிந்தபுரம் ருக்மணி கோவில் விட்டல் சுவாமிகள், கோவில் அறங்காவலர் ஜெகன்னாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story