காவேரிப்பட்டணத்தில் துணிகரம்; மாரியம்மன் கோவிலில் நகைகள், உண்டியல் திருட்டு


காவேரிப்பட்டணத்தில் துணிகரம்; மாரியம்மன் கோவிலில் நகைகள், உண்டியல் திருட்டு
x
தினத்தந்தி 4 March 2021 9:13 PM GMT (Updated: 4 March 2021 9:16 PM GMT)

காவேரிப்பட்டணத்தில் மாரியம்மன் கோவிலில் நகைகள், உண்டியல் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அம்பேத்கர் காலனியில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். 

அப்போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் உள்ளே சென்று பார்த்த போது கோவிலின் கருவறை அருகில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பட்டு சேலைகள் சிதறி கிடந்தன. மேலும் கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலை காணவில்லை.

இதைத் தொடர்ந்து கோவில் நிர்வாகி ராஜவேலுக்கு பக்தர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர் காவேரிப்பட்டணம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கோவிலின் பின்புறத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது.

நள்ளிரவில் கோவிலுக்குள் வந்த மர்ம ஆசாமிகள் கதவை உடைத்து உள்ளே சென்று சாமிக்கு அணிந்திருந்த நகைகள் மற்றும் உண்டியல் காணிக்கை பணத்தையும் திருடிச் சென்றது தெரிய வந்தது. 

இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த திருட்டு சம்பவம் காவேரிப்பட்டணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story