முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்- கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை


முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்- கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 March 2021 9:32 PM GMT (Updated: 4 March 2021 9:32 PM GMT)

முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு
முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டு, ஈரோடு மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. மேலும், ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய தேர்தல்‌ ஆணையம்‌ சுதந்திரமான, நியாயமான தேர்தல்‌ நடைபெறுவதை உறுதி செய்திடவும்‌, தேர்தல்‌ பிரசாரத்தின்போது அனைத்து வேட்பாளர்களுக்கிடையே பாதுகாப்பினை உறுதி செய்திடவும் பல்வேறு அறிவுரைகள்‌ மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அபராதம்
அதன்படி, பொதுமக்கள் வணிக வளாகங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், காய்கறி அங்காடிகள், மளிகை பொருட்கள் அங்காடிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து பொது இடங்களுக்கு வரும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். மேலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
எனவே, மேற்கண்ட நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல், பொது இடங்களில் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.

Next Story