காலிங்கராயன் வாய்க்காலில் விழுந்த மாடு-கன்றுக்குட்டிகள் மீட்பு


காலிங்கராயன் வாய்க்காலில் விழுந்த மாடு-கன்றுக்குட்டிகள் மீட்பு
x
தினத்தந்தி 4 March 2021 9:34 PM GMT (Updated: 4 March 2021 9:34 PM GMT)

ஈரோட்டில் காலிங்கராயன் வாய்க்காலில் விழுந்த மாடு-கன்றுக்குட்டிகள் உயிருடன் மீட்கப்பட்டன.

ஈரோடு
ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் வாய்க்காலின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.
இந்த நிலையில் ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் காலிங்கராயன் வாய்க்கால் கரையோரம் மேய்ந்து கொண்டிருந்த 2 எருமை மாடுகள் மற்றும் அதன் 2 கன்றுக்குட்டிகள் தண்ணீர் குடிக்க வந்தபோது வாய்க்காலுக்குள் விழுந்தது. வாய்க்காலின் இருபுறமும் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளதால், மாடுகளால் வெளியே வர முடியவில்லை. இதனால் தண்ணீரில் நீந்தியபடி சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றது.
இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுபற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று வாய்க்காலில் தத்தளித்து கொண்டிருந்த 2 எருமை மாடுகள், அதன் கன்றுக்குட்டிகளை கயிறு கட்டி, பொதுமக்கள் குளிப்பதற்காக அமைக்கப்பட்டு உள்ள படிக்கட்டு வழியாக மீட்டனர்.

Next Story