ஊத்தங்கரை அருகே வாலிபர் கொலை வழக்கில் நண்பர் உள்பட 2 பேர் கைது காதல் விவகாரத்தில் தீர்த்து கட்டியதாக வாக்குமூலம்


ஊத்தங்கரை அருகே வாலிபர் கொலை வழக்கில் நண்பர் உள்பட 2 பேர் கைது காதல் விவகாரத்தில் தீர்த்து கட்டியதாக வாக்குமூலம்
x
தினத்தந்தி 4 March 2021 11:41 PM GMT (Updated: 4 March 2021 11:46 PM GMT)

ஊத்தங்கரை அருகே வாலிபர் கொலை வழக்கில் நண்பர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். காதல் விவகாரத்தில் தீர்த்து கட்டியதாக அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அனுமன்தீர்த்தம் - பாவக்கல் பிரிவு சாலையில் கடந்த 26-ந் தேதி 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அதில் கொலையான வாலிபர் திருப்பத்தூர் மாவட்டம் மேல்அச்சமங்கலத்தை சேர்ந்த திலீப்குமார் (வயது 25) என தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஊத்தங்கரை அருகே உள்ள பெரிய தள்ளப்பாடியை சேர்ந்த செல்வகுமார் (25), அரூர் அருகே உள்ள சின்னாகுப்பத்தைச் சேர்ந்த மணிகண்டன் (23) ஆகியோர் திலீப்குமாரை கொலை செய்ததாக போலீசார் கண்டுபிடித்தனர்.

2 பேர் கைது - வாக்குமூலம்

அவர்கள் 2 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். கைதான செல்வகுமார் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நானும், திலீப்குமாரும் திருப்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2017-ம் ஆண்டு படித்தோம். அப்போது நாங்கள் நண்பர்களாக இருந்தோம். இந்த நிலையில் எனது உறவுக்கார பெண் ஒருவரை திலீப்குமார் காதலித்தார். இது எனக்கு பிடிக்கவில்லை. இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இதனால் எங்களுக்குள் பிரச்சினை இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு நண்பர் ஒருவரின் திருமணத்தில் திலீப்குமாரும், நானும் சந்தித்து பேசினோம். அந்த நேரம் என்னிடம் இருந்த பழைய செல்போன் ஒன்றை திலீப்குமார் வாங்கினார். இதற்கான பணம் ரூ.8 ஆயிரம் தருவதாக கூறினார். ஆனால் சொன்னபடி பணத்தை தரவில்லை.

கழுத்தை அறுத்து கொன்றேன்

இதனால் எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. காதல் விவகாரம் மற்றும் பணம் கொடுக்கல் -வாங்கலில் என்னிடம் பிரச்சினை செய்ததால் திலீப்குமாரை கொலை செய்ய முடிவு செய்தேன். இதற்காக அரூர் சின்னாகுப்பத்தை சேர்ந்த எனது நண்பர் மணிகண்டனிடம் தெரிவித்தேன். கடந்த 25-ந்தேதி திலீப்குமார் செல்போனை சர்வீஸ் செய்வதற்காக வருவதாக கூறினான்.

அதன்படி ஊத்தங்கரை வந்த திலீப்குமாரும், நானும், மணிகண்டனும் அனுமன்தீர்த்தம் பகுதிக்கு மது குடிக்க சென்றோம். அப்போது நான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திலீப்குமாரின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு உடலை அந்த இடத்திலேயே விட்டுசென்றேன். மேலும் திலீப்குமாரின் செல்போன், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு நானும், மணிகண்டனும் தலைமறைவாகி விட்டோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கைதான செல்வகுமார், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் போலீசார் ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் சிறையில் அடைத்தனர். இந்த கொலை சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story