சட்டமன்ற தொகுதிகளில்மண்டல அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவிப்பு


சட்டமன்ற தொகுதிகளில்மண்டல அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவிப்பு
x
தினத்தந்தி 5 March 2021 4:41 PM GMT (Updated: 5 March 2021 4:41 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் 297 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு மண்டல அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறினார்.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 297 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு மண்டல அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறினார்.
மண்டல அதிகாரிகள்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தாராபுரம் தொகுதியில் 40, காங்கேயத்தில் 38, அவினாசியில் 36, திருப்பூர் வடக்கு தொகுதியில் 40, திருப்பூர் தெற்கு தொகுதியில் 33, பல்லடத்தில் 39, உடுமலையில் 37, மடத்துக்குளத்தில் 34 என மொத்தம் 297 மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில்  மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த பயிற்சிக்கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்தியேன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் அனைத்து வழிகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சாலைகளின் நிலை, ஆறு, வாய்க்கால் மற்றும் பாலம் உள்ளதா? என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும். வாக்குச்சாவடிகளின் நிலை, கட்டிடம், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும். முந்தைய காலத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்ட வாக்குச்சாவடிகளின் விவரங்களை ஆய்வு செய்து தெரிவிக்க வேண்டும். மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இயக்கும் பயிற்சியை நன்கு மேற்கொள்ள வேண்டும். கொரேனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
மாதிரி வாக்குப்பதிவு
வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் தங்கள் மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் உரிய அனைத்து படிவங்கள், கவர்கள், இதர பொருட்கள் சரியாக உள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், பச்சை நிற முத்திரை தாள், உலோக முத்திரை, அழியா மைக்குப்பிகள், வாக்காளர் பட்டியல் உள்ளிட்டவற்றை கைவசம் வைத்திருக்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் போதுமான அதிகாரிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதுபோல் தேவையான அளவு ரிசர்வ் பணியாளர்களை வைக்க வேண்டும்.
வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் எல்லைக்குள் சின்னங்கள், கட்சி தொடர்பான விளம்பரங்கள் இருக்கக்கூடாது. வேட்பாளர்களின் தேர்தல் மையங்கள் 200 மீட்டருக்கு அப்பால் அமைக்க வேண்டும். வாக்குப்பதிவு அன்று காலை 7 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விட்டதா? என்பதை உறுதிப்படுத்தி அதை உடனடியாக தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். மாதிரி வாக்குப்பதிவு ஏஜெண்டுகளுக்கு செய்து காட்டப்பட்டதை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டவர்களை மட்டுமே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்க வேண்டும். 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.
ஓட்டு எண்ணிக்கை மையம்
வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தல் பொருட்களை வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் இருந்து பெற்று ஒப்புதல் வழங்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை உரிய முறையில் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஒப்படைக்க வேண்டும். வாக்குச்சாவடி வாரியான ஆண், பெண் ஓட்டு விவரங்களையும், பிற புள்ளி விவரங்களையும் உரிய படிவத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் அமீது, தேர்தல் தாசில்தார் முருகதாஸ் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story