திருப்பூரில் பத்திரப்பதிவு மோசடி வழக்கில் தட்டச்சு அலுவலக ஊழியர் கைது


திருப்பூரில் பத்திரப்பதிவு மோசடி வழக்கில் தட்டச்சு அலுவலக ஊழியர் கைது
x
தினத்தந்தி 5 March 2021 5:09 PM GMT (Updated: 5 March 2021 5:09 PM GMT)

திருப்பூரில் பத்திரப்பதிவு மோசடி வழக்கில் தட்டச்சு அலுவலக ஊழியரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

திருப்பூர்
திருப்பூரில் பத்திரப்பதிவு மோசடி வழக்கில் தட்டச்சு அலுவலக ஊழியரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பத்திரப்பதிவு அலுவலகத்தில் மோசடி
திருப்பூர் பத்திரப்பதிவு மாவட்ட பதிவாளர் ராமசாமி, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனிடம் புகார் மனு அளித்தார். அதில் திருப்பூர் இணை சார்பதிவாளர் எண்.1,எண்.2, தொட்டிபாளையம் சார்பதிவாளர் மற்றும் நல்லூர் சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்து அரசுக்கு செலுத்த வேண்டிய பத்திரப்பதிவு தொகையை கையாடல் செய்ததாக அந்தந்த சார்பதிவாளர் புகார் அளித்துள்ளனர்.
மேற்கண்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் 47 பத்திரப்பதிவுக்கு பொதுமக்கள் அரசுக்கு இணையவழியில் கட்டிய ரூ.68 லட்சத்து 93 ஆயிரத்து 432-ஐ சார் பதிவாளர் அலுவலகங்களில் வேலை செய்யும் அலுவலர்கள், தனியார் ஒப்பந்த கணினி அலுவலர்கள், பத்திர எழுத்தர்கள் ஆகியோர் கூட்டு சதி செய்து கையாடல் செய்திருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கூறியிருந்தார்.
இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பாலமுருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சொர்ணவல்லி தலைமையிலான தனிப்படையினர் விசாரணை செய்தனர்.
தட்டச்சு அலுவலக ஊழியர் கைது
இந்த முறைகேடுகளில் ஈடுபட்டதாக இணை சார்பதிவாளர் எண்.1 அலுவலக உதவியாளராக இருந்த சங்கர் மற்றும் தட்டச்சு அலுவலகம் நடத்திவரும் ஜெய்சங்கர் ஆகியோரை கடந்த ஜனவரி மாதம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிலரை தேடிவந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக ஈரோடு நசியனூரை சேர்ந்த பிரகாஷ் (வயது 33) என்பவரை தனிப்படையினர் நேற்று கைது செய்தனர்.
விசாரணையில் பிரகாஷ், அப்பகுதியில் உள்ள பத்திரப்பதிவு சம்பந்தமான தட்டச்சு அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வந்துள்ளார். இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சங்கரின் உடன் படித்த நண்பர் ஆவார். தொட்டிபாளையம் சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் பன்னீர்செல்வமும் இவருடன் சேர்ந்துள்ளார். இவர்கள் கூட்டு சேர்ந்து பத்திரப்பதிவின் போது பயன்படுத்தப்படும் ரசீதுகளில் உள்ள தொகைக்கு மறுபடியும் பயன்படுத்தக்கூடிய புதிய பதிவுகளை பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிரகாசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
===================


Next Story