வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் நிகழ்ச்சி


வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 5 March 2021 6:00 PM GMT (Updated: 5 March 2021 6:00 PM GMT)

வலங்கைமான் மகாமாரியம்மன் கோவி்லில் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. வருகிற 21-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான பாடைகாவடி திருவிழா நடக்கிறது.

வலங்கைமான்:
வலங்கைமான் மகாமாரியம்மன் கோவி்லில் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. வருகிற 21-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான பாடைகாவடி திருவிழா நடக்கிறது. 
மகாமாரியம்மன் கோவில் 
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது.   இக்கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பங்குனி மாதம் பாடைகாவடி திருவிழா தமிழக அளவில் பிரசித்தி பெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பாடை காவடி, அலகு காவடி, பன்னீர் காவடி, தொட்டில் காவடிகளை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவர். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பாடை காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக  பாடைகாவடி திருவிழாவும், ஆவணி ஞாயிற்றுக்கிழமை நடக்கும் தெப்ப திருவிழாவும் நடைபெறவில்லை.
பூச்சொரிதல் நிகழ்ச்சி
அதன்படி இந்த ஆண்டுக்கான பாடைகாவடி திருவிழா வருகிற 21-ந்தேதி நடக்கிறது. விழாவைமுன்னிட்டு நேற்று மகாமாரியம்மன்கோவிலில் பூச்சொரிதல் நிகழ்ச்சி தொடங்கியது. இதையொட்டி காலை மகாமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து இரவு சாமி வீதி உலா நடந்தது. அப்போது வீடு, வீடாக சென்று பொதுமக்கள் கூடைகூடையாக மலர்களை அம்மனுக்கு வழங்கி வழிபட்டனர். 
பாடைகாவடி விழா 
விழாவில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் காப்பு கட்டும் நிகழ்ச்சியும், வருகிற  14-ந்தேதி   இரண்டாம் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடக்கிறது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாடைகாவடி திருவிழா வருகிற 21-ந்தேதி நடக்கிறது. விழா நாட்களில் தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது.28-ந்தேதி புஷ்ப பல்லக்கு விழாவும், அடுத்தமாதம்(ஏப்ரல்)  11-ந்தேதி கடைஞாயிறு விழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறையின் சார்பில் செயல் அலுவலர் ரமேஷ், ஆய்வாளர் தமிழ்மணி, மேலாளர் சீனிவாசன் மற்றும்   கோவில் பணியாளர்கள், கிராமமக்கள் செய்து  வருகி்ன்றனர். 

Next Story