காரைக்கால், திருபுவனையில் மதுபாட்டில்கள் கடத்திய பெண் உள்பட 3 பேர் கைது


காரைக்கால், திருபுவனையில் மதுபாட்டில்கள் கடத்திய பெண் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 5 March 2021 8:03 PM GMT (Updated: 5 March 2021 8:23 PM GMT)

காரைக்கால், திருபுவனையில் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் மதுபாட்டில்கள் கடத்திய பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரைக்கால், 

புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு மதுபானம், பரிசு பொருட்கள் வினியோகத்தை தடுக்க போலீசார், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் திருநள்ளாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் அம்பகரத்தூர் சோழன்குறிச்சி கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை வழிமறித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.

இதையடுத்து அவரது மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையை சோதனை     செய்தபோது ரூ.6 ஆயிரம் மதிப்பிலான சாராயம், மதுபாட்டில்கள் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. 

விசாரணையில் அவர் பேரளம் கூத்தானூரைச் சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 25) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சாராயம், மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரைக்கால் பஸ் நிலையத்தில், சீர்காழியைச் சேர்ந்த குமுதவள்ளி (50) என்பவர் ரூ.4 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களுடன் பஸ்சில் ஏற தயாராக நின்றார். அவரை ரோந்து பணியில் ஈடுபட்ட காரைக்கால் நகர போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் புதுவை மதகடிப்பட்டு பஸ் நிறுத்தம் பகுதியில் திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் குமாரவேல், அஜய்குமார் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பையுடன் ஆட்டோவில் இருந்து இறங்கி வந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம் கானான்குப்பத்தை சேர்ந்த கண்ணன் (42) என்பதும், அவர் கையில் வைத்திருந்த பையில் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்களை மறைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, மதுபாட்ல்களை பறிமுதல் செய்தனர்.

கலிதீர்த்தாள்குப்பம் அருகே மோட்டார் சைக்கிளில் மூட்டையுடன் வந்த வாலிபரை அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் வழிமறித்தனர். உடனே அவர் மூட்டையை சாலையில் வீசிவிட்டு, வேகமாக தப்பிச்சென்றார்.

இதையடுத்து சாலையில் கிடந்த மூட்டையை சோதனை செய்தபோது, சாராய பாக்கெட்டுகள் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றி, தப்பியோடிய ஆண்டியார்பாளையம் வேல்முருகனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story