ஈரோட்டில் ரெயில் பயணிகளின் உடைமைகள் சோதனை; தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை


ஈரோட்டில் ரெயில் பயணிகளின் உடைமைகள் சோதனை; தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 March 2021 8:34 PM GMT (Updated: 5 March 2021 8:34 PM GMT)

ஈரோட்டில், ரெயில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து, தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்தனர்.

ஈரோடு
ஈரோட்டில், ரெயில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து, தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்தனர்.
தீவிர கண்காணிப்பு
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்பட முக்கிய இடங்களில் பறக்கும் படை குழுக்கள் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் அந்த குழுவினர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் யாரேனும் எடுத்துச்செல்கிறார்களா? என்றும், பரிசு பொருட்கள் கொண்டு செல்கிறார்களா? என்றும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
பயணிகளின் உடைமைகள் சோதனை
இந்த நிலையில் பறக்கும் படை குழுவில் உள்ள ஈரோடு சூரம்பட்டி போலீசார் ஈரோடு ரெயில் நிலையத்தின் முன்பு நின்று கொண்டு பயணிகளின் உடைமைகளை நேற்று தீவிரமாக சோதனை செய்து நடவடிக்கை எடுத்தனர். 
மேலும் முன்பதிவு பயணச்சீட்டு உள்ளவர்கள் மட்டுமே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் நுழைவு வாயில் பகுதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.  தற்போது பிளாட்பார அனுமதி சீட்டு கிடையாது என்பதால் ரெயில் பயணிகளை தவிர வேறும் யாரும் ரெயில் நிலையத்துக்குள் செல்ல முடியாது. மேலும் முன்பதிவு பயணச்சீட்டு வைத்திருக்கும் ரெயில் பயணிகள் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவணம் வைத்திருந்தால் மட்டுமே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

Next Story