திம்பம் மலைப்பாதையில் அடுத்தடுத்து 2 லாரிகள் பழுது; 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


திம்பம் மலைப்பாதையில் அடுத்தடுத்து 2 லாரிகள் பழுது; 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 5 March 2021 8:44 PM GMT (Updated: 5 March 2021 8:44 PM GMT)

திம்பம் மலைப்பாதையில் அடுத்தடுத்து 2 லாரிகள் பழுதாகி நின்றதால், 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் அடுத்தடுத்து 2 லாரிகள் பழுதாகி நின்றதால், 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
திம்பம் மலைப்பாதை
சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி அருகே திம்பம் மலைப்பாதை உள்ளது. ஈரோடு மாவட்டம் வழியாக கர்நாடகா செல்லும் முக்கிய பாதை இது என்பதால் எப்போதும் பஸ், லாரி, கார், சரக்கு ஆட்டோ என இருசக்கர வாகனங்கள் இந்த பாதையில் சென்று வந்தபடி இருக்கும். 
திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.  பாரம் ஏற்றி வரும் லாரிகள் மலைப்பாதையின் கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் நின்று விடுகின்றன. 
14 சக்கர லாரி
இதன்காரணமாக திம்பம் மலைப்பாதையில் லாரிகள் பழுதாகி நிற்பதும், இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதும் நாள்தோறும் நடந்துவரும் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. 
இந்தநிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கோவை மாவட்டம் அன்னூருக்கு மின்சார உதிரிபாகங்கள் ஏற்றிக்கொண்டு 14 சக்கர லாரி ஒன்று வந்துகொண்டு இருந்தது.
9-வது கொண்டை ஊசி வளைவு
நேற்று காலை 6 மணி அளவில் இந்த லாரி திம்பம் மலைப்பாதையின் 9-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றது. ஆனால் டிரைவரால் லாரியை திருப்ப முடியவில்லை. இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றார்கள். பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு, காலை 10 மணி அளவில் லாரி ரோட்டின் ஓரத்துக்கு இழுத்து நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் மற்ற வாகனங்கள் சென்றன. 
7 மணி நேரம்
இதேபோல் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சேலத்துக்கு கிரானைட் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நேற்று காலை வந்துகொண்டு இருந்தது. இந்த லாரி திம்பம் மலைப்பாதையின் 26-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முடியாமல் நின்றுவிட்டது. இதனால் சுமார் 3 மணி நேரம் அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. அதன்பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி ஓரமாக இழுத்து நிறுத்தப்பட்டது. அதன்பிறகே போக்குவரத்து சீரானது. 
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்த லாரியால் 4 மணி நேரமும், கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த லாரியால் 3 மணி நேரமும் என மொத்தம் திம்பம் மலைப்பாதையில் நேற்று 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
பயணிகள் புகார்
ஆசனூரில் உள்ள காவல், மதுவிலக்கு என 2 சோதனை சாவடிகள் உள்ளன. காரப்பள்ளத்தில் வனத்துறை சோதனை சாவடி உள்ளது. இந்த 3 சோதனை சாவடிகளையும் எப்படி 14 சக்கர லாரி கடந்து திம்பம் மலைப்பாதைக்கு வந்தது? என்று பயணிகள் கேள்வி எழுப்பி உள்ளார்கள். 
மேலும் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் நின்றுவிடும். அதனால் போக்குவரத்து பாதிக்கும் என்று தெரிந்தும் எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளாது இருப்பது ஏனோ? என்றும் புகார் கூறினார்கள். 

Next Story