கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 6 March 2021 1:34 AM GMT (Updated: 6 March 2021 1:34 AM GMT)

கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்று பிடித்தனர்

வாகன சோதனை

பொள்ளாச்சி அருகே ஆனைமலை வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் தலைமையில் போலீசார் மீனாட்சிபுரத்தில் கிழவன்புதூர் பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை போலீசார் மறித்தனர். ஆனால் டிரைவர் லாரியை நிறுத்தாமல் ஓட்டி சென்றார். இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்றனர். போலீசார் பின்னால் வருவதை பார்த்ததும் டிரைவர் வேகமாக லாரியை ஓட்டி சென்றார்.

போலீசார் விசாரணை

ஆனால் போலீசார் விடாமல் துரத்தினர். இதற்கிடையில் போலீசார் தொடர்ந்து வருவதை பார்த்ததும் கோவிந்தாபுரத்தில் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். போலீசார் விரைந்து வந்து மினி லாரியில் இருந்த மூட்டைகளை சோதனை செய்தனர்.

 அப்போது மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. பின்னர் 50 மூட்டைகளில் இருந்த 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்த ரேஷன் அரிசி மூட்டைகளை, லாரியுடன் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம், ஆனைமலை போலீசார் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, மினி லாரியின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கோட்டூர், ஆழியாறு பகுதிகளில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு கடத்தல்காரர்கள் ரேஷன் அரிசியை வாங்கி, பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. 

மேலும் இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story