சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 9 ஆயிரத்து 847 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்: மாவட்ட தேர்தல் அலுவலர் கோ.பிரகாஷ்


சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 9 ஆயிரத்து 847 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்: மாவட்ட தேர்தல் அலுவலர் கோ.பிரகாஷ்
x
தினத்தந்தி 6 March 2021 2:59 AM GMT (Updated: 6 March 2021 2:59 AM GMT)

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 9 ஆயிரத்து 847 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்றும், ராணிமேரி, லயோலா மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஓட்டு எண்ணிக்கை மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கமிஷனர் ஆய்வு

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற இருக்கிறது. இந்தநிலையில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும், கொரோனா நோயாளிகள் வீட்டில் இருந்தபடி தபால் ஓட்டு அளிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் இருக்கும் வீட்டில் ‘12-டி’ படிவம் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

சென்னை மயிலாப்பூர் முண்டககன்னி அம்மன் கோவில் தெருவில் நடைபெற்ற ‘12-டி’ படிவம் வழங்கும் பணியை சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கோ.பிரகாஷ் நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

40 லட்சம் வாக்காளர்கள்

சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 8 ஆயிரத்து 644 பேரும், 7 ஆயிரத்து 460 மாற்றுத்திறனாளிகளும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 90 நபர்களும் கண்டறியப்பட்டு அவர்களுக்கு ‘12-டி’ படிவங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இறுதி வாக்காளர் பட்டியல் மற்றும் துணை வாக்காளர் பட்டியலின்படி சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 19 லட்சத்து 95 ஆயிரத்து 581 ஆண் வாக்காளர்களும், 20 லட்சத்து 60 ஆயிரத்து 698 பெண் வாக்காளர்களும், 1,081 இதர வாக்காளர்களும் என மொத்தம் 40 லட்சத்து 57 ஆயிரத்து 360 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பறக்கும் படை மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுக்களால் நேற்று முன்தினம் வரை உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சத்து 8 ஆயிரத்து 500 வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 960 கிலோ அரிசி, சேலை, சால்வை உள்பட 140 பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு எந்திரங்கள்

சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள், பேனர்கள் மற்றும் இதர விளம்பரம் தொடர்பாக 34 ஆயிரத்து 742 பொது இடங்களிலும், 4 ஆயிரத்து 760 தனியார் இடங்களிலும் என மொத்தம் 39 ஆயிரத்து 502 இடங்களில் விளம்பரங்கள் அழிக்கப்படடுள்ளன.

சென்னை மயிலாப்பூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஒரு புகார் மட்டும் பெறப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் 5 ஆயிரத்து 911 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 2 ஆயிரத்து 157 துணை வாக்குச்சாவடி அடங்கும்.

சட்டமன்ற தேர்தலுக்காக சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 9 ஆயிரத்து 847 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வாக்குப்பதிவுக்கு தேவையான 7 ஆயிரத்து 392 கட்டுப்பாட்டு கருவிகள், 7 ஆயிரத்து 474 ‘விவிபேடு’ எந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.

பதற்றமான வாக்குச்சாவடிகள்

வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய 30 ஆயிரம் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த தேர்தலில் சென்னையில் 335 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருந்தது. அந்தவகையில் தற்போது 461 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.

சென்னை மாவட்ட தேர்தல் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்புகளில் இதுவரை 16 புகார்கள் பெறப்பட்டு, அதில் 15 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ‘சிவிஜில்’ செல்போன் செயலி மூலம் 27 புகார்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் 1950 தேர்தல் உதவி எண்ணில் 1,202 அழைப்புகள் பெறப்பட்டு அவற்றுக்கு தகுந்த விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையம்

ஆர்.கே.நகர், திரு.வி.க நகர், ராயபுரம், துறைமுகம் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் ராணிமேரி கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணாநகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு லயோலா கல்லூரியிலும், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி தொகுதிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்திலும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story