தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி படுகாயம்


தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி படுகாயம்
x
தினத்தந்தி 6 March 2021 10:02 PM GMT (Updated: 6 March 2021 10:02 PM GMT)

தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி படுகாயம் அடைந்தது.

தாளவாடி
ஈரோடு மாவட்டம் தாளவாடி, வனச்சரகத்தில் ஏராளமான புலி, சிறுத்தைகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தைகள் மல்குத்திபுரம், பீம்ராஜ்நகர், தொட்டகாஜனூர், சூசைபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடு மற்றும் நாய்களை வேட்டையாடின. இதேபோல் ஒரு சம்பவம் நேற்று முன்தினமும் நடைபெற்று உள்ளது. தொட்டகாஜனூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராஜ் (வயது 53). விவசாயி. இவர் ஆடு-மாடுகளும் வளர்த்து வருகிறார். தன்னுடைய தோட்டத்தில் மாடுகளையும், கன்றுக்குட்டிகளையும் கட்டி வைத்திருந்தார்.  இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மாடுகள் கத்தும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு தோட்டத்து வீட்டில் இருந்து வெங்கட்ராஜ் வெளியே வந்து பார்த்தார். அப்போது கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கிக்கொண்டு இருப்பது தெரிந்தது உடனே ஓடி வாருங்கள், ஓடி வாருங்கள் என்று சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். அதற்குள் சத்தம் கேட்டு சிறுத்தை கன்றுக்குட்டியை விட்டுவிட்டு காட்டுக்குள் ஓடிவிட்டது. 
சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி படுகாயம் அடைந்தது. இதுபற்றி வெங்கட்ராஜ் தாளவாடி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார் அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் அங்கு பதிவாகியிருந்த கால் தடங்களை ஆய்வு செய்தார்கள். 
அப்போது  அங்கு வந்திருந்த கிராமமக்கள், சிறுத்தை ஒரு முறை வந்து பழகிவிட்டால் மீண்டும் இதே பகுதிக்கு வந்து வேட்டையாடி செல்லும் எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கவேண்டும் என்றார்கள்.

Next Story