தூத்துக்குடியில் வாக்குச்சாவடிகளில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு


தூத்துக்குடியில்  வாக்குச்சாவடிகளில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு
x
தினத்தந்தி 7 March 2021 3:36 PM GMT (Updated: 7 March 2021 3:36 PM GMT)

தூத்துக்குடியில் வாக்குச்சாவடிகளில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வாக்குச்சாவடிகளில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் அவர், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட புனித லசால் மேல்நிலைப்பள்ளி, காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காந்திநகர் இந்து அரிசன தொடக்கப்பள்ளி, சண்முகபுரம் டி.என்.டி.டி.ஏ நடுநிலைப்பள்ளி, ஹோலிகிராஸ் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு போதிய இடவசதி, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் வருவதற்கான சாய்தள வசதி, காற்றோட்ட வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தார்.

பேட்டி

பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாவட்ட அளவிலான 104 அலுவலர்கள் மூலம் வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு முடிவில் ஏதேனும் குறைகள் இருப்பின் நிவர்த்தி செய்யப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 2 ஆயிரத்து 97 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் பதற்றம் மற்றும் மிக பதற்றமான வாக்குச்சாவடிகளாக 247 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். 

மேலும் வாக்குப்பதிவு நேரமும் மாலை 6 மணி என்பது இரவு 7 மணி வரை ஒரு மணி நேரம் நீட்டிக்கபட்டு உள்ளது. கடந்த 2 தேர்தல்களில் குறைவாக வாக்குப்பதிவு உள்ள வாக்குச்சாவடி பகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அதிக அளவு நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். 

ஆய்வின் போது, தூத்துக்குடி தாசில்தார் ஜஸ்டின் மற்றும் துணை தாசில்தார்கள், அலுவலர்கள உடன் இருந்தனர்.

Next Story