சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் - ஓசூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்


சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் - ஓசூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 7 March 2021 7:52 PM GMT (Updated: 2021-03-08T01:26:28+05:30)

சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கையெழுத்து இயக்கத்தை ஓசூரில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்தார்.

ஓசூர்,

சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை எய்திட, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும்  கையெழுத்து இயக்கம் ஓசூர் ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி முதல் கையெழுத்திட்டு, உறுதிமொழி ஏற்று கொண்டார். 

பின்னர் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ெகாடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று உதவி கலெக்டர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் செந்தில் முருகன், சமூக சேவகி ராதா, மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச்சென்றனர்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

சட்டசபை தேர்தலையொட்டி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வழங்குதல், வாகன தணிக்கை, தேர்தல் நடத்தை விதிமுறைகள், அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் தலா 20 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வழங்கப்பட்டு எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து பஸ் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. 

அதன்படி, ஓசூர் மாநகராட்சி பகுதியில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் தொடங்கி, உறுமொழியும் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமை ஆற்ற, தேர்தல் நாளன்று வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வாக்களித்து மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு என்ற இலக்கை அடைய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Next Story