150 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் சிறையில் அடைப்பு


150 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண்       சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 8 March 2021 4:18 PM GMT (Updated: 8 March 2021 4:18 PM GMT)

புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 150 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் சிறையில் அடைக்கப்பட்டார்.

புதுச்சேரி, மார்ச்.
புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 150 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் சிறையில் அடைக்கப்பட்டார். 

150 பவுன் நகை திருட்டு 

புதுச்சேரி ஏனாம் வெங்கடாசலபிள்ளை வீதியை சேர்ந்தவர் அ‌‌ஷ்ரப். இவரது மகள் ‌‌ஷகிலா (வயது 51). பிரெஞ்சு அரசு பள்ளி ஆசிரியை. திருமணம் ஆகாத இவர் தனது தந்தை மற்றும் சகோதரி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் இவரது வீட்டு மாடி அறையில் பீரோவில் வைத்து இருந்த 150 பவுன் நகைகள் திருடுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதில் வீட்டு வேலை செய்து வந்த ராசு உடையார் தோட்டத்தை சேர்ந்த செல்வி என்கிற இருதயமேரி (38) என்பவர் தான் நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 2 பவுன் தங்க சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. 

வாக்குமூலம்

நகை திருடியது குறித்து போலீசில் இருதயமேரி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‌‌ஷகிலா வீட்டில் நான் வேலைக்கு சேர்ந்தேன். மாடியில் உள்ள அறையில் அவரது தந்தை அ‌‌ஷ்ரப் மட்டும் தனியாக இருந்தார். அவர்கள் என்னை நம்பி வீட்டின் உள்ளே அனுமதித்தனர். சில நேரங்களில் நான் அறையை சுத்தம் செய்யும் போது அங்கு யாரும் இருக்கமாட்டார்கள்.

இதை பயன்படுத்தி நகைகளை திருட முடிவு செய்து மொத்தமாக எடுத்தால் மாட்டிக்கொள்வோம் என கருதி ஒவ்வொன்றாக திருடினேன். எனது வீட்டில் வைக்காமல் எனக்கு தெரிந்தவர்களிடம் கொடுத்து வைத்தேன். சில நகைகளை விற்பனை செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

சிறையில் அடைப்பு 

இருதயமேரி யாரிடமெல்லாம் நகைகளை கொடுத்து வைத்துள்ளார் என்பது குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர். அவர்களில் சிலர் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் இருதயமேரியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Next Story